வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (18) பெற்றார், பிறந்தார், பெருநாட்டார் !

அன்பு என்னும் பற்று அறவே இல்லாதவர்கள்  “பிசினேறி”கள் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (18) பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் !!

-----------------------------------------------------------------------------------------

பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்

உற்றார் உகந்தார் எனவேண்டார்மற்றோர்

இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே

சரணங் கொடுத்தாலும் தாம் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

பெற்றார், பிறந்தார், பெரு நாட்டார், பேருலகில்

உற்றார், உகந்தார் என வேண்டார்; - மற்றோர்

இரணம் கொடுத்தாலும் இடுவர்; இடாரே

சரணம் கொடுத்தாலும் தாம் !

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

இரணம் = புண்

சரணம் = புகலிடம்

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

பேர் உலகில் = பெரிய நிலவுலகத்திலே ; பெற்றார் = (எம்மை) பெற்றவர் ; பிறந்தார் = (எமக்குப்) பிறந்தவர் ; பெரு நாட்டார் = (எம்முடைய) பெரிய நாட்டினர் ; உற்றார் = (எம்முடைய) சுற்றத்தார் ; உகந்தார் = (எம்மை) நேசித்தவர் ; என வேண்டார் = என்று விரும்பாதவராகிய உலோபிகள் ; மற்றோர் = பிறர் ; இரணம் கொடுத்தால் = தம் உடம்பிலே புண் செய்தால் ; இடுவர் = (அவருக்கு எல்லாம்) கொடுப்பர் ; சரணம் கொடுத்தாலும் இடார் = (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றும் கொடார் ;

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

அடுத்தவருக்குக் கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத பிசினேறிகள்தன்னைப் பெற்றவர்கள், தன் பிள்ளைகள், சுற்றத்தார், நண்பர்கள், நாட்டினர், என்னும் பற்று சற்றேனும் இல்லாதவர்கள் !

இந்தப்பிசினேறிகளிடம் எத்துணை அன்பு வைத்திருந்தாலும் அல்லது உதவி நாடிப் புகல் அடைந்திருந்தாலும்  யாருக்கும் எதையும் ருவதற்கு இவர்கள் துளிக்கூடத் துணியமாட்டார்கள் !

ஆனால், “பிசினேறிளைக் கொள்ளையர்கள் அடித்து உதைத்து, உடம்பைப் புண்ணாக்கிக் கேட்டால், அவர்கள்பால்  அச்சம் கொண்டு, கேட்கும் அனைத்தையும் தந்திடவும் தயங்கமாட்டார்கள் !

-----------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

பிசினேறி = உலோபி (MISER)

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

”பிசினேறி”கள் (உலோபிகள்) தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கு அன்றி நலம் புரியும் தாய் தந்தையர், முதலாயினோருக்கு யாதும் கொடார் !!

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (19) சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர் !

ஒரு சாண் வயிற்றுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (19) சேவித்துஞ் சென்றிரந்தும் !!

-----------------------------------------------------------------------------------------

சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல் கடந்தும்

பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

சேவித்தும், சென்று இரந்தும், தெள் நீர்க் கடல் கடந்தும்,

பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும்போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம் !

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சேவித்து = ஊழியம் செய்து

பாவித்து = பாசாங்கு செய்து

----------------------------------------------------------------------------------------

சொல் விளக்கம்:

நாழி = முற்காலத்தில் வழக்கிலிருந்து ஒரு முகத்தல் அளவைப் படி

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வயிற்றின் கொடுமையால் = வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே ; சேவித்தும் = (பிறரைச்) சேவித்தும் ; சென்று இரந்தும் = (பலரிடத்தே) போய் யாசித்தும் ; தெள் நீர்க் கடல் கடந்தும் = தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும் ; பாவித்தும் = (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும் ; பார் ஆண்டும் = பூமியை ஆண்டும் ; பாட்டு இசைத்தும் = (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும் ; நாம் = நாம் ; உடம்பை = இந்த உடம்பினை ; நாழி அரிசிக்கே = நாழி அரிசிக்காகவே ; பாழின் = வீணிலே ; போவிப்பம் = செலுத்துகின்றோம்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

கூனிக் குறுகிப் பிறருக்குக் கும்பிடு போடுகிறோம்உடம்பை வளைத்துஅய்யா, அம்மாஎன்று இரந்து நிற்கிறோம்; கடல் கடந்து சென்று பொருள் ஈட்ட முனைகிறோம்; சிறிய மனிதரைக் கூடப் பெரிய மனிதராகப் பாவித்துக் கெஞ்சுகிறோம் !

செல்வந்தரைப் புகழ்ந்து, பாட்டுப் பாடிக் காசு சேர்க்கிறோம்; இந்தப் பூமியை ஆளும் மன்னவனாகவும் நடிக்கிறோம்; இவையெல்லாம் எதற்காக ? வயிற்றுப் பசியைத் தீர்க்கும் ஒரு படி அரிசிக்காக அல்லவா ? என்னே மனித வாழ்க்கை !

அரிதாகக் கிடைத்திருக்கும்  இந்த உடம்பினைப் பயன்படுத்தி, அறவழியில் செயல்பட்டு அனைவருக்கும் நன்மை கிடைக்கச் செய்யாமல், உடம்பினை எப்படியெல்லாம்  ஆட்டுவித்து வீணடிக்கிறோம் பாருங்கள் !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

அரிதாகக் கிடைத்த மனித உடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (20) அம்மி துணையாக ஆறிழிந்த ஆறு !

அம்மிக் கல்லைக் கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கலாமா ?

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (20) அம்மி துணையாக  !!

-----------------------------------------------------------------------------------------

அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங்

கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம்இம்மை

மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி

வெறுமைக்கு வித்தாய் விடும் !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்

கொம்மை முலை பகர்வார்க் கொண்டாட்டம்இம்மை

மறுமைக்கும் நன்று அன்று மா நிதியம் போக்கி

வெறுமைக்கு வித்து ஆய்விடும் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

கொம்மை முலை = திரட்சி பொருந்திய தனங்களை ; பகர்வார்க் கொண்டாட்டம் = விற்கின்ற பரத்தையரை (இன்பங் காரணமாக) கொண்டாடுதல் ; அம்மி துணையாக = அம்மிக் கல்லே துணையாக ; ஆறு இழிந்தவாறு ஒக்கும் = ஆற்று வெள்ளத்திலே இறங்கிய தன்மையைப் போலும் ; (அன்றியும்) மாநிதியம் போக்கி = (அது) பெரிய செல்வத்தை அழித்து ; வெறுமைக்கு வித்து ஆய்விடும் = வறுமைக்குக் காரணம் ஆகிவிடும் ; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று = அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப்பிற்கும் நல்லதாகாது.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

அம்மிக் கல்லைத் தெப்பமாக்கி அதனைத் கொண்டு ஆற்றைக் கடக்க ஒருவன் முயன்றால், பொங்கிவரும் புதுப்புனலில் மூழ்கி  தன் பொன்னான உயிரையே  இழக்க வேண்டி நேரும் !  

அதுபோல், விலைமகளிரைத் தேடிச் சென்று இன்பம் நுகர முயன்றால் தன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் இழப்பதுடன் வறுமையின் கொடிய பிடிக்குள் அகப்பட்டுத் துன்பப்படவும்  நேரும் !

அஃதல்லாமல், விலைமகளின் தொடர்பு, அவனது இம்மை மறுமை இரண்டையுமே பாழ்படுத்தி அவனை நீங்காத் துயரத்தில் ஆழ்த்திவிடும் !

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

விலை மகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை அடையாமல், வறுமையையும், பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன்.

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (21) நீரும் நிழலும் நிலம் பொதியும் !

நெஞ்சில் வஞ்சமிலார்க்கு எல்லாம் கிடைக்கும் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (21) நீரு நிழலு நிலம்பொதியும்  !!

-----------------------------------------------------------------------------------------

நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெருவாழ்வும்ஊரும்

வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றுந்

தருஞ்சிவந்த தாமரையாள் தான் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்

வரும் திருவும் வாழ்நாளும் வஞ்சம் இலார்க்கு என்றும்

தரும் சிவந்த தாமரையாள் தான் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

சிவந்த தாமரையாள் = செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள் ; வஞ்சம் இல்லார்க்கு = வஞ்சனை இல்லாதவருக்கு ; நீரும் = நீர் வளத்தையும் ; நிழலும் = நிழல் வளத்தையும் ; நிலம் பொதியும் நெற்கட்டும் = நிலத்திலே நிறையும் நெற்போரையும் ; பேரும் = பேரையும் ; புகழும் = புகழையும் ; பெருவழ்வும் = பெரிய வாழ்வையும்ஊரும் = சீறூரையும் ; வரும் திருவும் = வளர்கின்ற செல்வத்தையும் ; வாழ்நாளும் = நிறைந்த ஆயுளையும் ; என்றும் தரும் = எந்நாளும் கொடுத்தருளுவள்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நெஞ்சில் வஞ்சனை இல்லாத நேர்மை மனிதர்களுக்கு, தாமரைச் செல்வியாம் திருமகள் நிறைந்த நீர் வளத்துடன் நில வளமும், நிலத்தில் விளையும் நெல் வளமும், குடியிருக்க அழகிய உறையுள் வளத்தையும் அருள்வாள் !

ஊரார் விதந்து போற்றும் வண்ணம் நற்பெயரையும், நல்லிசைப் பேற்றையும் வளமான வாழ்வையும், செழுமையான ஊரையும், வளர்கின்ற செல்வத்தையும் விரும்பி நல்கியருள்வாள் !

இவையன்றி, நோய் நொடி இல்லாத நிறைவான வாழ்நாளையும் நேர்த்தியாய்த் தந்தருள்வாள் நெடியோன் துணைவி, நேரிசைச் செல்வி பொய்கைப் பூவையாள் !

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

வஞ்சனை இல்லாதவருக்கு இலக்குமியினது அருளால் எல்லா நலமும் உண்டாகும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (22) பாடுபட்டுத் தேடிப் பணத்தை !

பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள் ! நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள் !

-----------------------------------------------------------------------------------------

ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி, நல்வழி ஆகியவை ஔவையார் இயற்றிய நூல்கள். இவற்றுள் நல்வழியிலிருந்து ஒரு செய்யுளைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (22) பாடுபட்டுத் தேடி !

-----------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டிங்

காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டுஇங்கு

ஆவிதான் போயினபின்பு யாரே அநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.

----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

பணத்தைப் பாடுபட்டுத் தேடி = பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து ; புதைத்து வைத்து = (உண்ணாமலும் அறம் செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து ; கேடு கெட்ட மானிடரே = நன்மை எல்லாவற்றையும் இழந்த மனிதர்களே : கேளுங்கள் = (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக ; கூடு விட்டு = உடம்பினை விட்டு ; ஆவி போயின பின்பு = உயிர் நீங்கிய பின்பு ; பாவிகாள் = பாவிகளே ; அந்தப் பணம் = அந்தப் பணத்தை ; இங்கு ஆர் அநுபவிப்பார் = இவ்விடத்து யாவர் அநுபவிப்பார் ;

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து, பசியாற உண்ணாமலும், அறச் செயல்களில்  ஈடுபடாமலும், பாதுகாப்புக் கருதி, யாருக்கும் தெரியாமல் பூமியிலே புதைத்து வைக்கின்ற அறிவுகெட்ட மனிதர்களே கேட்பீர்களாக !

உங்கள் உயிர் பிரிந்து போகும் வேளையில் பணம் உங்களுடன் வராது. உங்களுக்குப் பிற்காலம் அந்தப் பணத்தின் பயனை துய்க்கப் போவது யார் என்று உங்களுக்கே தெரியாது !

அப்படி இருக்கையில் எதற்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? யாருக்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? உலக வாழ்வை நீப்பதற்கு முன் நற்செயல்களைச் செய்து நல்லவர் என்று பெயர் எடுங்களேன் !

----------------------------------------------------------------------------------------

இன்னொரு கருத்து:

----------------------------------------------------------------------------------------

வருந்தி வருந்தி உழைத்து கோடி கோடியாகச் சேர்த்து அளகைப் (BANK) பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகளாக மறைத்து வைக்கும் மதிகெட்ட மாந்தர்களே கேளுங்கள் ! வாழும் காலத்தில் அறச் செயல்களுக்குப் பணத்தைப் செலவிட்டு நற்பெயர் ஈட்டுங்கள் ! அதை விடுத்து, அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்க விழைவீர்களானால், அந்தப் பணமே உங்கள் கான்முளைகளை (வாரிசுகள்) சோம்பேறிகளாக்கி, உங்கள் குலக்கொடியையே வேரறுத்து வீழ்த்தி விடும் !

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (23) வேதாளஞ் சேருமே ! வெள்ளெருக்குப் பூக்குமே !

பொய்சாட்சி சொல்பவர் குடும்பம் துன்பப்பட நேரும் !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

--------------------------------------------------------------------------------------

பாடல்: (23) வேதாளஞ் சேருமே !

---------------------------------------------------------------------------------------

வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே

பாதாள மூலி படருமேமூதேவி

சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே

மன்றோரஞ் சொன்னார் மனை !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

வேதாளம் சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும்;

பாதள மூலி படரும்; - மூதேவி

சென்று இருந்து வாழ்வள்; சேடன் குடி புகும்;

மன்று ஓரம் சொன்னார் மனை !

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சேடன் = சேஷன் என்பதன் மரூஉ. சேஷன் 

என்பதற்கு வேறு பல 

பொருள்களுடன் பாம்பு என்னும் 

பொருளும் உள்ளது.

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

மன்று ஓரம் சொன்னார் மனை = வழக்காடு (நீதி) மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவருடைய வீட்டில் ; வேதாளம் சேரும் = பேய்கள் (வந்து) சேரும் ; வெள்ளெருக்குப் பூக்கும் = வெள்ளெருக்கு முளைத்துக் காடாகிப் பூக்கும் ; பாதாள மூலி படரும் = சப்பாத்திக் கள்ளிச் செடி படர்ந்து வளரும் ; மூதேவி சென்று வாழ்வள் = மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள் ; சேடன் குடிபுகும் = பாம்புகள் குடியிருக்கும்.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

வழக்காடு (நீதி) மன்றத்தில் எந்தவொரு மனிதருக்கும் எதிராகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது. மனசாட்சியை மதிக்காமல் பொய் சாட்சி சொன்னால் அவர் குடும்பமே அழிந்து போகும்; அஃதன்றி அவர் குடியிருக்கும் வீடும் பாழாகிப் போகும் ! எப்படி ?

அவர் குடியிருக்கும் வீட்டில் பேய்கள் வந்து சேரும்; தீமையின் அடையாளமான வெள்ளெருக்கஞ் செடி வளர்ந்து பூ பூக்கும்; பாதாள மூலி எனப்படும் சப்பாத்திக் கள்ளி படர்ந்து வளரும்; வறுமைக்குக் காரணமாகச் சொல்லப்படும் மூதேவி போய் வாழ்வாள்;  பாம்புகள் குடியிருக்கும் புதர்கள் மண்டிப்போகும் !

[இவையெல்லாம், குடியும், குடியிருக்கும் இல்லமும் பாழாகும் என்பதை விளக்கும் குறியீடுகள் ! ஔவையார் மொழியில் சொன்னால்தானே மக்கள் சற்றுக் காதுக் கொடுத்தாவது கேட்கிறார்கள்]

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

நீதி மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர் குடும்பத்தோடு அழிவது மட்டுமன்றி அவர் குடியிருந்த வீடும் பாழாம்.