வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஆறிடும் மேடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறிடும் மேடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (32) ஆறிடும் மேடும் மடுவும் போல் !

செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் குணமுடையது !

---------------------------------------------------------------------------------------

ஔவையார் அருளிச் செய்த பாடல்கள் எல்லாம் இனிய வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துத் தருவன. செல்வத்தின்  நிலையாமை பற்றி நல்வழி என்னும் நூல் வாயிலாக  ஔவையார் அருளிய ஒரு பாடல் இதோ !

--------------------------------------------------------------------------------------

பாடல்.32. ஆறிடு மேடும் மடுவும் !

--------------------------------------------------------------------------------------

ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்

மாறிடு மேறிடும் மாநிலத்தீர்  -  சோறிடுஞ்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறு முயர்ந்து.

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஆறு இடும் மேடும் மடுவும் போல் ஆம் செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்  -  சோறு இடும்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பு ஆக

உள் நீர்மை வீறும் உயர்ந்து.

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

தருமம் =அறம்

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------------------------------------------------------

மாநிலத்தீர் = இந்தப் பெரிய பூமியில் வாழும் மாந்தர்களே ! ஆறு இடும் மேடும் மடுவும் போல் = ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடும் பள்ளமும் போல; செல்வம் ஏறிடும் மாறிடும் = செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் ; (ஆதலினால்) சோறு இடும் = இரந்து வருவோர்க்கு சோறு  இடுங்கள் ; தண்ணீரும் வாரும் = (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வார்த்திடுங்கள் (கொடுங்கள்) ; தருமமே சார்பு ஆக = (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக ; உள்நீர்மை உயர்ந்து வீறும் = உள்ளத்திலே தூய தன்மை ஓங்கி விளங்கும். (போல் ஆம் என்பதில் வரும் ஆம் என்பது அசைச் சொல். இதற்குப் பொருள் காண வேண்டியதில்லை)

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

ந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் நல்வினையே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------        

நிலையில்லாதது  செல்வம். அது  உள்ள பொழுதே  இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளியுங்கள்மனம் தூய்மை பெற்று விளங்கும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

-------------------------------------------------------------------------------------------------------