பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள் ! நற்செயல்களுக்குப் பயன்படுத்துங்கள் !
-----------------------------------------------------------------------------------------
ஆத்திச்
சூடி,
கொன்றை வேந்தன், மூதுரை, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி,
நல்வழி ஆகியவை ஔவையார் இயற்றிய நூல்கள். இவற்றுள் நல்வழியிலிருந்து
ஒரு செய்யுளைப் பார்ப்போமா !
-----------------------------------------------------------------------------------------
பாடல் (22) பாடுபட்டுத் தேடி !
-----------------------------------------------------------------------------------------
பாடுபட்டுத்
தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான்
போயினபின் பாரே யநுபவிப்பார்
பாவிகாள்
அந்தப் பணம்.
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------
பாடுபட்டுத்
தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுஇங்கு
ஆவிதான்
போயினபின்பு யாரே அநுபவிப்பார்
பாவிகாள்
அந்தப் பணம்.
----------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
பணத்தைப்
பாடுபட்டுத் தேடி = பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து
; புதைத்து வைத்து = (உண்ணாமலும் அறம் செய்யாமலும்)
பூமியிலே புதைத்து வைத்து ; கேடு கெட்ட மானிடரே
= நன்மை எல்லாவற்றையும் இழந்த மனிதர்களே : கேளுங்கள்
= (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக ; கூடு விட்டு = உடம்பினை விட்டு ; ஆவி போயின பின்பு = உயிர் நீங்கிய பின்பு ; பாவிகாள் = பாவிகளே ; அந்தப் பணம்
= அந்தப் பணத்தை ; இங்கு ஆர் அநுபவிப்பார்
= இவ்விடத்து யாவர் அநுபவிப்பார் ;
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
பணத்தினை வருந்தி உழைத்துச் சேர்த்து, பசியாற உண்ணாமலும், அறச் செயல்களில் ஈடுபடாமலும், பாதுகாப்புக் கருதி, யாருக்கும் தெரியாமல் பூமியிலே புதைத்து வைக்கின்ற அறிவுகெட்ட மனிதர்களே கேட்பீர்களாக !
உங்கள் உயிர் பிரிந்து போகும்
வேளையில் பணம் உங்களுடன் வராது. உங்களுக்குப் பிற்காலம்
அந்தப் பணத்தின் பயனை துய்க்கப் போவது யார் என்று
உங்களுக்கே தெரியாது !
அப்படி
இருக்கையில் எதற்காகச் சேர்த்து வைக்கிறீர்கள் ? யாருக்காகச் சேர்த்து
வைக்கிறீர்கள் ? உலக வாழ்வை நீப்பதற்கு முன் நற்செயல்களைச் செய்து
நல்லவர் என்று பெயர் எடுங்களேன் !
----------------------------------------------------------------------------------------
இன்னொரு கருத்து:
----------------------------------------------------------------------------------------
வருந்தி வருந்தி உழைத்து கோடி கோடியாகச் சேர்த்து அளகைப் (BANK) பாதுகாப்புப் பெட்டகத்தில் தங்கக் கட்டிகளாக மறைத்து வைக்கும் மதிகெட்ட மாந்தர்களே கேளுங்கள் ! வாழும் காலத்தில் அறச் செயல்களுக்குப் பணத்தைப் செலவிட்டு நற்பெயர் ஈட்டுங்கள் ! அதை விடுத்து, அடுத்த தலைமுறைக்குச் சேர்த்து வைக்க விழைவீர்களானால், அந்தப் பணமே உங்கள் கான்முளைகளை (வாரிசுகள்) சோம்பேறிகளாக்கி, உங்கள் குலக்கொடியையே வேரறுத்து வீழ்த்தி விடும் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக