வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

திங்கள், 10 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (இ.வ) பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் !

ஆனைமுகனே ! பாலும் தேனும் உனக்குத் தருகிறேன்; எனக்குத் தமிழில் வல்லமை தா !

------------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! இதோ அந்த இறை வணக்கப் பாடல் !

------------------------------------------------------------------------------------------

பாடல் (.). பாலும் தெளி தேனும் பாகும் !

------------------------------------------------------------------------------------------

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்

சங்கத் தமிழ்மூன்றுந் தா !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய்

துங்கக் கரி முகத்துத் தூ மணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

கோலம் செய் = அழகினைச் செய்கின்ற ; துங்கம் = உயர்வாகிய ; கரிமுகத்து = யானை முகத்தையுடைய  ; தூ மணியே = தூய்மையான செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளே ! பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் = ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய ; இவை நாலும் கலந்து = இந்நான்கையும் கலந்து ; நான் உனக்குத் தருவேன் = அடியேன் நினக்கு அளித்துப் பூசை செய்வேன் ; சங்கத் தமிழ் மூன்றும் = சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும் ; நீ எனக்குத் தா பிள்ளையாரப்பா எனக்குத் தந்தருள்வீராக !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

அழகிய செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளேநினக்கு ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய இந்நான்கையும் கலந்து  அளித்துப் பூசை செய்வேன் !

எனக்கு நின் அருள் வேண்டுமப்பா ! முதல் இடை, கடை என்னும் மூன்று சங்கங்கங்களால் வளர்க்கப்பட்ட இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் எனக்குச் சிறந்த புலமையைத் தந்தருள்வாய் ஆனைமுகனே !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

ஆனைமுகக் கடவுளே ! எனக்கு முத்தமிழிலும் நல்ல புலமையைத் தந்தருள்வாயாக !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) ,26]

{10-01-2022}

 -----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (01) புண்ணியம் ஆம், பாவம் போம் !

நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும் !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்(01). புண்ணியம் ஆம் பாவம் போம் !

------------------------------------------------------------------------------------------

புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை

மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால்

ஈது ஒழிய வேறு இல்லை எச் சமயத்தோர் சொல்லும்

தீது ஒழிய நன்மை செயல்.

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

புண்ணியம் ஆம் = அறமானது வளர்ச்சியைக் கொடுக்கும் ; பாவம் போம் = பாவமானது அழிவினைச் செய்யும் ; போன நாள் செய்த அவை = முற்பிறப்பில் செய்த அப் புண்ணிய பாவங்களே ; மண்ணில் பிறந்தார்க்கு = பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு ; வைத்த பொருள் = (இப்பிறப்பிலே இன்ப துன்பங்களைத் துய்க்கும்படி) வைத்த பொருளாகும் ; எண்ணுங்கால் = ஆராய்ந்து பார்க்கின் ; எச்சமயத்தோர் சொல்லு = எந்த மத்த்தினர் சொல்லுவதும் ; ஈது ஒழிய வேறு இல்லை = இதுவன்றி வேறில்லை ; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் = பாவம் செய்யாது புண்ணியமே செய்க.

------------------------------------------------------------------------------------------

வடசொற்கள்;

புண்ணியம் = நல்வினை.

பாவம் = தீவினை

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும்; தீவினைகள் செய்தால் தளர்ச்சி ஏற்படும்

பூமியில் பிறந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்நாள் வரைச் செய்துள்ள நல்வினை தீவினைகளே அவர்களது எஞ்சிய வாழ்வை முடிவு செய்கிறது !

ஆராய்ந்து பார்த்தால், எந்த சமயமாக இருந்தாலும் அது எடுத்துரைக்கும் கருத்து இதுதானே அன்றி வேறில்லை

ஆகையால் மானிடர்களே, தீவினைகளைத் தவிர்த்து நல்வினைகளைச் செய்வீர்களாக !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் உண்டாவதால், தீவினைகள் செய்வதைக் கைவிட்டு நல்வினைகளைச் செய்வீர்களாக !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

 கொடுப்பவர் உயர்குலம் ! கொடுக்காதவர் தாழ்குலம் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது  ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று  !  ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (02) சாதி இரண்டொழிய வேறில்லை !

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்  -  மேதினியில்

இட்டார் பெரியோர்  இடாதோர் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை சாற்றும்கால்

நீதி வழுவா நெறிமுறையில்மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி.

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

சாற்றுங்கால் = சொல்லப் போனால் ; மேதினியில் = பூமியில் ; சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை = இரண்டு சாதியின்றி வேறு இல்லை (அவ்விரண்டு சாதியாரும் யாவர் எனில்) ; நீதி வழுவா நெறி = நீதி தவறாத நல்வழியில் நின்று ; முறையின் = முறையோடு ; இட்டார் = (வறியர் முதலானவர்களுக்கு) ஈந்தவரே ; பெரியோர் = உயர்வாகிய சாதியார் ; இடாதார் = ஈயாதவரே ; இழிகுலத்தார் = இழிவாகிய சாதியார் ; பட்டாங்கில் உள்ளபடி = உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம் !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா

நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர் !

பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருங்கிப் போன கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு சாதிகள் இவ்விரண்டே !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

கொடுப்பவர் உயர்குலத்தினர் ; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி உலகில் வேறு சாதியில்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedaa70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 26]