ஒரு சாண் வயிற்றுக்காக என்னவெல்லாம் செய்கிறோம் !
----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
-----------------------------------------------------------------------------------------
பாடல்
(19) சேவித்துஞ் சென்றிரந்தும் !!
-----------------------------------------------------------------------------------------
சேவித்துஞ்
சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல் கடந்தும்
பாவித்தும்
பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி
அரிசிக்கே நாம் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
சேவித்தும், சென்று இரந்தும், தெள் நீர்க் கடல் கடந்தும்,
பாவித்தும், பார் ஆண்டும், பாட்டு இசைத்தும் – போவிப்பம்
பாழின்
உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி
அரிசிக்கே நாம் !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்:
சேவித்து = ஊழியம் செய்து
பாவித்து = பாசாங்கு செய்து
----------------------------------------------------------------------------------------
சொல்
விளக்கம்:
நாழி = முற்காலத்தில் வழக்கிலிருந்து ஒரு முகத்தல் அளவைப் படி
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
வயிற்றின்
கொடுமையால் = வயிற்றினுடைய (பசிக்)
கொடுமையினாலே ; சேவித்தும் = (பிறரைச்) சேவித்தும் ; சென்று இரந்தும்
= (பலரிடத்தே) போய் யாசித்தும் ; தெள் நீர்க் கடல் கடந்தும் = தெளிவாகிய நீரையுடைய கடலைக்
கடந்து வேறு நாடு சென்றும் ; பாவித்தும் = (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும் ; பார் ஆண்டும் = பூமியை ஆண்டும் ; பாட்டு இசைத்தும் = (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும் ; நாம் = நாம்
; உடம்பை = இந்த உடம்பினை ; நாழி அரிசிக்கே = நாழி அரிசிக்காகவே ; பாழின் = வீணிலே ; போவிப்பம்
= செலுத்துகின்றோம்.
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
கூனிக் குறுகிப் பிறருக்குக் கும்பிடு போடுகிறோம்; உடம்பை வளைத்து “அய்யா, அம்மா” என்று இரந்து நிற்கிறோம்; கடல் கடந்து சென்று பொருள் ஈட்ட முனைகிறோம்; சிறிய மனிதரைக் கூடப் பெரிய மனிதராகப் பாவித்துக் கெஞ்சுகிறோம் !
செல்வந்தரைப்
புகழ்ந்து, பாட்டுப் பாடிக் காசு சேர்க்கிறோம்;
இந்தப் பூமியை ஆளும் மன்னவனாகவும் நடிக்கிறோம்; இவையெல்லாம் எதற்காக ? வயிற்றுப் பசியைத் தீர்க்கும்
ஒரு படி அரிசிக்காக அல்லவா ? என்னே மனித வாழ்க்கை !
அரிதாகக்
கிடைத்திருக்கும் இந்த உடம்பினைப் பயன்படுத்தி, அறவழியில் செயல்பட்டு அனைவருக்கும் நன்மை கிடைக்கச் செய்யாமல், உடம்பினை எப்படியெல்லாம் ஆட்டுவித்து வீணடிக்கிறோம் பாருங்கள் !
-----------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------------------------------------------------------------------
அரிதாகக்
கிடைத்த மனித உடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமையாகும் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக