வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஆனமுதலில் அதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆனமுதலில் அதிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (25) ஆன முதலில் அதிகம் செலவானால் !

வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானமிழந்து போவான் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல்: (25) ஆன முதலில் அதிகம் செலவானால் !

---------------------------------------------------------------------------------------

ஆன முதலில் அதிகஞ் செலவானான்

மானம் அழிந்து மதிகெட்டுப்போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு !

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

ஆன முதலில் அதிகம் செலவு ஆனால்

மானம் அழிந்து மதி கெட்டுபோன திசை

எல்லார்க்கும் கள்ளன் ஆய் ஏழ் பிறப்பும் தீயன் ஆய்

நல்லார்க்கும் பொல்லன் ஆம் நாடு !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

ஆன முதலில் செலவு அதிகம் ஆனான் = தனக்குக் கிடைத்த முதற் பொருளுக்குச் செலவு அதிகமானவன் ; மானம் அழிந்து = மானம் கெட்டு ; மதி கெட்டு = அறிவு இழந்து ; போன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் = தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி ; ஏழ் பிறப்பும் தீயன் ஆய் ; எழுவகைப் பிறப்புக்களிலும் பாவம் உடைவன் ஆகி ; நல்லார்க்கும் பொல்லன் ஆம் = (தன்னிடத்தில் அன்பு வைத்த) பெண்டிர்களுக்கும் பொல்லாதவன் ஆவான் ; நாடு = (இதனை) ஆராய்ந்து அறிவாயாக !

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

சொந்தமாகத் தொழில் செய்து பிழைக்க விரும்பும் ஒருவன் தொழிலில் முதலீடு செய்திருக்கும் தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால் என்னவாகும் ?

கைப்பணம் கரைந்து போகும்; கடன் தொகை மிகுதியாகும்! பிறரால் ஏளனப்படுத்தப் படுவான். மானம் போகும்; அறிவு வேலை செய்யாது; தீய எண்ணம் கொண்டவனாய் பேசப்படுவான் !

வாங்கிய கடனைத் திருப்பித் தரமுடியாமல் ஓடிப் போவான்; எந்த ஊருக்குச் சென்றாலும் திருடனைப் போல் பார்க்கப்படுவான் ! ஆராய்ந்து பார்த்தால், மொத்தத்தில் மனித குலத்துக்கே பொல்லாதவனாகக் காட்சி அளிப்பான்!

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து

----------------------------------------------------------------------------------------

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழி பாவங்களை அடைவான்; ஆதலினால் வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022)

---------------------------------------------------------------------------------------