வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (10) ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் !

அடித்துக்கொண்டு அழுது புரள்வதால் மாண்டார் வரப்போவதில்லை !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

பாடல் (10) ஆண்டாண்டு  தோறும் அழுது !

-----------------------------------------------------------------------------------------

ஆண்டாண்டு  தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநிலத்தீர்வேண்டா

நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மா நிலத்தீர்வேண்டா

நமக்கும் அது வழியே நம் போம் அளவும்

எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

மா நிலத்தீர் = இந்தப் பூமியில் பிறந்திருக்கும் மனிதர்களே ; ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் = எந்நாளும்  ஆற்றாமையால் அழுது அங்கலாய்த்துக்  கொண்டிருப்பதால் ; மாண்டார் வருவரோ = இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்) ; வேண்டா = (ஆதலினால்) அழவேண்டுவதில்லை ; நமக்கும் அது வழியே = நமக்கும் அவ்விறப்பே வழியாகும் ; நாம் போம் அளவும் = நாம் இறந்து போமளவும் ; எமக்கு என் என்று = எமக்கு யாது தொடர்பு என்று ; இட்டு உண்டு இரும் = இரவலர்க்கு ஐயமிட்டு நீங்களும் உண்டு  கவலையற்று இருங்கள்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

இறப்பு என்பது இயல்பானது; இறந்து போனவரைப் பற்றி எண்ணி எண்ணி எத்தனை ஆண்டுகள் அழுதாலும் சரி, மாண்டவர் இவ்வுலகத்திற்கு மீண்டும் வரப் போவதில்லை !

ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பே இறுதி வழி ! எனவே நமக்கு இறப்பு வரும் வரையில் நடந்ததை எண்ணி வருந்திக்கொண்டிராமல், நமக்கு மட்டும் என்று செல்வத்தை சேர்த்து வைக்காமல் இல்லாதவர்களுக்கும் கொடுத்து எளிமையாக வாழுங்கள் !  

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

இறந்துபோனவரை எண்ணி அழுவதால் பயனில்லை. எனவே அறம் செய்து வாழ்ந்து கவலை நீங்கி வாழ்வீராக !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (11) ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் !

உணவில்லாமல் ஒரு நாள் ஓய்வாக இரு என்றால் வயிறு கேட்பதில்லை !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல் (11) ஒருநாள் உணவை !

---------------------------------------------------------------------------------------

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்த லரிது !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்ஒரு நாளும்

என் நோ அறியாய் இடும்பை கூர் என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இடும்பைகூர் என் வயிறே = தும்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே ; ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் = (கிடையாத போது) ஒரு நாளுக்கு உணவை விட்டிரு என்றால் விட்டிராய் ; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் = (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக் கொள் என்றால் ஏற்றுக் கொள்ளாய் ; ஒரு நாளும் என் நோ அறியாய் = ஒரு நாளிலாயினும்  என்னுடைய வருத்தத்தை அறியாய் ; உன்னோடு வாழ்தல் அரிது = (ஆதலினல்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

என் வயிறே ! உணவு கிடைக்காத ஒரு நாளில், ”இன்று உணவு கிடைக்கவில்லை; தொந்தரவு செய்யாதே, விட்டுவிடு” என்று சொன்னால் கேட்க மறுக்கிறாய்; ”பசிக்கிறது, உடனே உணவு தா” என்று கேட்டு அடம் பிடிக்கிறாய் !

உணவு நிரம்பக்  கிடைக்கும் இன்னொரு நாளில், ”நாளை உணவு கிடைக்கிறதோ இல்லையோ, இன்று நிரம்பக் கிடைக்கிறது, ஆகையால் இரண்டு நாள்களுக்கு வேண்டிய உணவையும் இப்பொழுதே  சேர்த்து எடுத்துக் கொள்என்று சொன்னால் அதையும் ஏற்க மறுக்கிறாய் !

ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை நீ அறிவதில்லை; நான் சொல்வதைக் கேட்காமல், உன் விருப்பத்திற்கு அடம் பிடித்துத் தொல்லை கொடுக்கும் என் வயிறே,  உன்னோடு கூடி வாழ்தல் என்பது எனக்கு இயலாத துன்ப நிகழ்வாக  அல்லவோ ஆகிவிட்டது !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

வயிற்றுக்கு உணவு அளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (12) ஆற்றங் கரையின் மரமும் அரசறிய !

உழவுத் தொழிலுக்கு இவ்வுலகில் ஒப்பு ஏதுமில்லை !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (12) ஆற்றங்கரையின் மரமும் !

----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றேஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய

வீற்று இருந்த வாழ்வும் விழும் அன்றேஏற்றம்

உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்

பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

ஆற்றங் கரையின் மரமும் = ஆற்றின் கரையிலுள்ள மரமும் ; அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் = அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும் = விழும் அன்றே = அழிந்துவிடும் அல்லவா ? ; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் = உழுது பயிர் செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும் ; அதற்கு ஒப்பு இல்லை = அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை ; வேறு ஓர் பணிக்கு = வேறு வகையான தொழில் வாழ்க்கை எல்லாம் ; பழுதுண்டு = தவறு உண்டு.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

ஆற்றின் கரையோரத்தில் உயர்ந்து வளர்ந்து நிற்கின்ற மரம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வந்தால் வேருடன் பறிந்து வீழ்ந்துபோகும்; அதன் வாழ்வு  நிலையில்லாதது !

அதுபோல், அரசன் அறியும் படியாகப்  பெருமையாக வாழ்கின்ற எந்தவொரு மனிதனின் வாழ்வும் அரசனின் பொறாமைக்கு இலக்காகி வீழ்ந்துபோகும்; அவன் வாழ்வும் நிலையில்லாதது !

ஆனால், வீழ்ச்சியில்லாத, நிலையான,  உயர்வான வாழ்க்கை, உழுதுண்டு வாழ்கின்ற உழவனின் வாழ்க்கையே ஆகும். அவ்வாழ்க்கைக்கு இவ்வுலகில் நிகர் வேறேதுமில்லை !

வேறு வகையான தொழில் செய்வோர்  வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சிக்கு இலக்காவதும் உண்டு; உழவுத் தொழிலுக்கு ஒப்பாவதும் இல்லை !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

உழுது பயிர் செய்து வாழும் வாழ்க்கையே குற்றமற்றதும், அழிவில்லாததும், தன்னுரிமை சார்ந்ததும் ஆகும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (13) ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றி !

வாழ்வதற்கு உரியாரை அழிக்க வல்லார் யார் ?

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (13) ஆவாரை யாரே அழிப்பர் !

-----------------------------------------------------------------------------------------

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்

மெய்யம் புவியதன் மேல் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

ஆவாரை யாரே அழிப்பர் அது அன்றிச்

சாவாரை யாரே தவிர்ப்பவர்ஓவாமல்

ஐயம் புகுவாரை யாரே விலக்குவர்

மெய் அம் புவி அதன் மேல் !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

அம் புவி அதன் மேல் = அழகிய பூமியின் மேலே ; மெய் = உண்மையாக ; ஆவாரை அழிப்பார் யார் = வாழ்வதற்கு உரியாரை அழிக்க வல்லார் யாவர் ; அது அன்றி = அதுவல்லாமல் ; சாவாரைத் தவிர்ப்பவர் யார் = இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர் ; ஓவாமல் = ஒழியாமல் ; ஐயம் புகுவாரை = பிச்சைக்குச் செல்வோரை ; விலக்குவார் யார் = தடுக்க வல்லவர் யாவர் ?

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

இந்தப் பூமியில் வாழ்வதற்கு உடலியல் தகுதி உள்ளவர்களை வாழக் கூடாது என்று தடுத்து,  அழித்துவிடும் வல்லமை உள்ளவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை !

மூப்பினாலும் பிணியினாலும் நலிவடைந்து இறப்பை எதிர்கொண்டு இருப்பவர்களை, இறக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளவர்களும் யாரும் இல்லை!

பிச்சை எடுத்து உண்பதை ஒழிவின்றிச் செய்து வரும் இரவலர்களை, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தக் கூடியவர்களும் யாரும் இல்லை !

உண்மையாகச் சொல்லப்போனால், விலக்க இயலாத உலகியல் நிகழ்வுகளை விலக்கக் கூடிய வல்லமை உள்ளவர்கள் இவ்வுலகில் ஒருவருமே இல்லை !

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் மில்லை.

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (14) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை !

பிறரிடம் பல்லைக் காட்டிக் கேட்டு வாங்குதல் இழிவு !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (14) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை !

----------------------------------------------------------------------------------------

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால வுறும் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

பிச்சைக்கு மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சை பல சொல்லி இடித்து உண்கைசிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர் விடுகை சால உறும் !

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

இச்சை = நைச்சியம் ; விருப்பம்

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

பேசுங்கால் = சொல்லுமிடத்து ; பிச்சைக்கு மூத்த குடிவழ்க்கை = பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கையாவது ; பல இச்சை சொல்லி இடித்து உண்கை = பலவாகிய இச்சைகளைப் பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம் ; சிச்சீசீச்சீ (இது என்ன செய்கை) ; வயிறு வளர்க்கைக்கு = இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும் ; மானம் அழியாது = மானங் கெடாமல் ; உயிர் விடுகை = உயிரை விடுதல் ; சால உறும் = மிகவும் பொருந்தும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

பிச்சை எடுத்து உண்டலினும் பெரிய இழிவுடைய குடிவாழ்க்கை  என்பது பல்லைக் காட்டி நைச்சியமாக பேசி ஒருவரை நெருங்கி,  கேட்டு வாங்கி உண்ணுதலாகும் !

சீச்சீ ! இது என்ன இழிவான வாழ்க்கை ! இப்படி நெளிந்து குழைந்து பேசி வயிறு வளர்ப்பதைக் காட்டிலும் மானம் கெடாமல் உயிரை விடுதல் மிகவும் பொருத்தமாக இருக்கும் !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரைவிட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (15) சிவாய நமவென்று சிந்தித்து !

சிவனே போற்றி என்று சிந்திப்பவர்க்கு !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (15) சிவாய நமவென்று !

----------------------------------------------------------------------------------------

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லைஉபாயம்

இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்

விதியே மதியாய் விடும் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒரு நாளும் இல்லைஉபாயம்

இதுவே மதி ஆகும் அல்லாத எல்லாம்

விதியே மதி ஆய்விடும் !

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சிவாயநம = சிவனே போற்றி

அபாயம் = இடர்

உபாயம் = நல்வழி

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

சிவாயநம() என்று சிந்தித்து இருப்போர்க்குசிவனே போற்றி என்று சிவன் பெயரை மனத்தில் உருவேற்றிக் கொண்டிருப்போருக்கு ; ஒரு நாளும் அபாயம் இல்லை = ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது ; இதுவே = இஃதொன்றுமே ; உபாயம் = (விதியை வெல்லுதற்கேற்ற நல்வழியும் ; மதி = இதுவல்லாத எல்லா அறிவுகளும் ; விதியே ஆய்விடும் = விதியின்படியே ஆகிவிடும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

சிவனே போற்றி என்னும் சிந்தனையை மனத்தில் உருவேற்றிக் கொண்டிருப்போர்க்கு வாழ்க்கையில் இன்னல்கள் எதுவும் பின்தொடர்ந்து வாராது !

இஃதொன்றே விதியென்று உரைக்கப்படும் நெடுங்கோட்டைத் அழிப்பதற்கான நல்வழி ! பிறவாறான சிந்தனைகள் எல்லாம் செயலழிந்து விதி என்னும் நெடுங்கோடு நிலைபெற்றுவிடும் !

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

சிவனுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போருக்கு, விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (16) தண்ணீர் நில நலத்தால், தக்கோர் !

பரிவுக் குணம் மனிதனுக்கு மாண்பைச் சேர்க்கிறது !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (16) தண்ணீர் நில நலத்தால் !

------------------------------------------------------------------------------------------

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண்ணீர்மை மாறாக் கருணையால்பெண்ணீர்மை

கற்பழியா ஆற்றால் கடல்சூழ்ந்த  வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

தண்ணீர் நில நலத்தால்; தக்கோர் குணம் கொடையால்;

கண் நீர்மை மாறாக் கருணையால்; - பெண் நீர்மை

கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி !

-----------------------------------------------------------------------------------------

வடசொல்:

கருணை = அருள்

அற்புதம் = வியப்பு, மேன்மை

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

தண்னீர் நில நலத்தால் = தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும் ; தக்கோர் குணம் கொடையால் = நல்லோருடைய குணமானது ஈகையினாலும் ; கண்ணீர்மை மாறாக் கருணையால் = கண்களுடைய குணமானது  நீங்காத அருளினாலும் ; பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் = பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் ; கடல் சூழ்ந்த வையகத்துள் = கடல் சூழ்ந்த பூமியினிடத்து ; அற்புதம் ஆம் = வியக்கத் தக்க மேன்மை உடையன ஆகும் ; என்று அறிஎன்று நீ அறிவாயாக !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நீரின் இயல்பும் சுவையும் அமைகிறது என்பதால், நிலத்தினால் நீருக்குப் பெருமை உண்டாகிறது !

ஈகைத் தன்மையே மனிதனை முழு மனிதனாக்குகிறது என்பதால், ஈகைக் குணத்தால் மனிதனுக்குப் பெருமை உண்டாகிறது !

கண்களில் ஒளிரும் பரிவு மனப்பான்மையே மனிதப் பிறவிக்கு மாண்பைச் சேர்க்கிறது என்பதால், பரிவுணர்வால்  கண்களுக்குப் பெருமை உண்டாகிறது !

கற்பு என்னும் மனவுறுதி தான்  பெண்ணின் இயல்பினை வரையறை செய்கிறது என்பதால், கற்பு ஒழுக்கத்தால் பெண்ணிற்குப் பெருமை உண்டாகிறது !

கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் வியக்கத்தக்க மேன்மையுடையவை இவைதான் என்பதை ஏ ! மனிதா ! நீ அறிவாயாக !

------------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் !