அன்பு என்னும் பற்று அறவே இல்லாதவர்கள் “பிசினேறி”கள் !
-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
------------------------------------------------------------------------------------------
பாடல்
(18) பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் !!
-----------------------------------------------------------------------------------------
பெற்றார்
பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார்
உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணங்
கொடுத்தால் இடுவர் இடாரே
சரணங்
கொடுத்தாலும் தாம் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
-----------------------------------------------------------------------------------------
பெற்றார், பிறந்தார், பெரு நாட்டார், பேருலகில்
உற்றார், உகந்தார் என வேண்டார்; - மற்றோர்
இரணம்
கொடுத்தாலும் இடுவர்; இடாரே
சரணம்
கொடுத்தாலும் தாம் !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்:
இரணம் = புண்
சரணம் = புகலிடம்
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
பேர்
உலகில்
= பெரிய நிலவுலகத்திலே ; பெற்றார் = (எம்மை) பெற்றவர் ; பிறந்தார்
= (எமக்குப்) பிறந்தவர் ; பெரு நாட்டார் = (எம்முடைய) பெரிய
நாட்டினர் ; உற்றார் = (எம்முடைய)
சுற்றத்தார் ; உகந்தார் = (எம்மை) நேசித்தவர் ; என வேண்டார்
= என்று விரும்பாதவராகிய உலோபிகள் ; மற்றோர்
= பிறர் ; இரணம் கொடுத்தால் = தம் உடம்பிலே புண் செய்தால் ; இடுவர் = (அவருக்கு எல்லாம்) கொடுப்பர் ; சரணம் கொடுத்தாலும் இடார் = (முன் சொல்லப்பட்டவர்)
அடைக்கலம் புகுந்தாராயினும் அவருக்கு ஒன்றும் கொடார் ;
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

அடுத்தவருக்குக் கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத “பிசினேறிகள்” தன்னைப் பெற்றவர்கள், தன் பிள்ளைகள், சுற்றத்தார், நண்பர்கள்,
நாட்டினர், என்னும் பற்று சற்றேனும் இல்லாதவர்கள் !
இந்தப் “பிசினேறி”களிடம் எத்துணை அன்பு வைத்திருந்தாலும்
அல்லது உதவி நாடிப் புகல் அடைந்திருந்தாலும் யாருக்கும் எதையும் தருவதற்கு
இவர்கள் துளிக்கூடத் துணியமாட்டார்கள்
!
ஆனால்,
“பிசினேறி”களைக் கொள்ளையர்கள் அடித்து
உதைத்து, உடம்பைப் புண்ணாக்கிக் கேட்டால், அவர்கள்பால்
அச்சம் கொண்டு, கேட்கும்
அனைத்தையும் தந்திடவும் தயங்கமாட்டார்கள் !
-----------------------------------------------------------------------------------------
சொல் விளக்கம்:
பிசினேறி = உலோபி (MISER)
------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------------------------------------------------------------------
”பிசினேறி”கள்
(உலோபிகள்) தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கு
அன்றி நலம் புரியும் தாய் தந்தையர், முதலாயினோருக்கு யாதும்
கொடார் !!
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக