வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

தாம்தாம்முன் செய்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (30) தாந்தாமுன் செய்தவினை தாமே !

அவரவரும் செய்த வினைகளை அவரவரும் துய்த்தலே நியதி!

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல்: (30) தாந்தாமுன் செய்த வினை !

----------------------------------------------------------------------------------------

தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்

பூந்தா மரையோன் பொறிவழியேவேந்தே

ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

தாம் தாம் முன் செய்த வினை தாமே அநுபவிப்பார்

பூந் தாமரையோன் பொறி வழியேவேந்தே

ஒறுத்தாரை என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றா

வெறுத்தாலும் போமோ விதி !

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

அநுபவிப்பார் = துய்ப்பார்

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வேந்தே = அரசனே ; தாம் தாம் முன்செய்த வினை = தாம் தாம் முன்பு செய்த நல்வினை தீவினைகளை ; பூந்தாமரையோன் பொறி வழியே = தாமரை மலரில் இருக்கின்ற படைப்புக் கடவுள் விதித்தபடியே ; தாமே அநுபவிப்பார் = தாமே அநுபவிப்பார்கள் ; ஒருத்தாரை என் செயலாம் = (தீவினையாலே தூண்டப்பட்டு) தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம் ; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ = ஊரிலுள்ள எல்லாரும் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------------------------------------------------------------------------

வேந்தே ! ஒவ்வொரு மனிதனும் தான் முன்பு செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப  விளையும் பயன்களை எதிர்கொண்டு துய்த்தே (அநுபவித்து) ஆகவேண்டும் ! இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது !  

ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒறுத்தால் (தண்டித்தால்) அதற்காக அவனை என்ன செய்வது ? முதல் மனிதன் செய்த தீவினையின் பயன் இரண்டாமவன் வழியாக ஒறுப்பாகி இருக்கிறது

இதுபோல் நேரக்கூடாது என்று ஊரெல்லாம் கூடி எதிர்த்தாலும் அல்லது வெறுத்தாலும், நேரவேண்டியது நேராமல் போய்விடுமா என்ன ? நேர்ந்தே தீரும் ! அதுதானே இயல்பு !

 ---------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

---------------------------------------------------------------------------------------

தமக்கு ஒருவன் துன்பம் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கு ஈடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்தது என்று அமைவதே அறிவு !

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}