உடம்பின் நிலையாமையை அறிந்த சான்றோர், அதன் மீது பற்று வைப்பதில்லை !
-----------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு
பாடல் உங்களுக்காக !
------------------------------------------------------------------------------------------
பாடல் (07) எல்லாப் படியாலும் எண்ணினால் !
------------------------------------------------------------------------------------------
எல்லாப் படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை – நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல
நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு !
-----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
எல்லாப் படியாலும் எண்ணினால்
இவ்வுடம்பு
பொல்லாப் புழு மலி நோய் புல் குரம்பை – நல்லார்
அறிந்து இருப்பார் ஆதலினால் ஆம் கமல
நீர் போல்
பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்:
கமலம் = தாமரை
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
எல்லாப் படியாலும் = எல்லா வகையாலும் ;
எண்ணினால் = ஆராயுமிடத்து ; இவ்வுடம்பு = இந்த உடம்பானது ; பொல்லாப் புழு = பொல்லாத புழுக்களுக்கும்; மலி நோய் = நிறைந்த பிணிகளுக்கும் ; புல் குரம்பை = புல்லிய குடிசையாக இருக்கிறது ;
நல்லார் = நல்லறிவு உடையோர் ; அறிந்திருப்பார் = (இவ்வுடம்பின் அழிவை) அறிந்திருப்பார்கள் ; ஆதலினால் = ஆகையால் ; (அவர்கள்) கமல
நீர்போல் = தாமரை இலையில் தண்ணீர் போல ; பிறிந்து இருப்பார் = (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள் ; பிறர்க்குப் பேசார் = (அதைக்குறித்து) பிறரிடம் பேச மாட்டார்கள்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்தால், மனிதவுடம்பானது
பொல்லாத புழுக்களுக்கும், நிறைந்த பிணிகளுக்கும் இருப்பிடம் தரும் குடிசையாகத்தான் அமைந்து இருக்கிறது !
கற்றறிந்த அறிஞர்கள் இவ்விடம்பின் அழியும் தன்மை பற்றி நன்றாகவே அறிந்திருப்பார்கள் !
அதனால்தான், தாமரை இலையானது தண்ணீரில் வாழ்ந்தாலும், அதனுடன் ஒட்டாமல் வாழ்வது போல், அறிஞர்கள் இந்த உடம்பின் மீது பற்று வைக்காமல் வாழ்வார்கள். இந்த உண்மையை உணராதவர்களிடம் இதைப் பற்றி அவர்கள் பேசுவதும் இல்லை !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
----------------------------------------------------------------------------------------
உடம்பின் இழிவை அறிந்த ஞானிகள்
உடம்போடு கூடியிருப்பினும் அதில் பற்றற்று இருப்பார்கள் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 24]
{08-01-2022}