வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

செவ்வாய், 4 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (37) வினைப் பயனை வெல்வதற்கு !

வினைப் பயனை வெல்ல முடியாது !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல் (37) வினைப் பயனை வெல்வதற்கு !

----------------------------------------------------------------------------------------

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பதெனக்

கண்ணுறுவ தல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்

விண்ணுறுவார்க் கில்லை விதி !

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்து ஆய நூல் அகத்தும் இல்லை நினைப்பது எனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்

விண் உறுவார்க்கு இல்லை விதி !

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

----------------------------------------------------------------------------------------

வினைப்பயனை வெல்வதற்கு இரு வினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்) ; வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை ; (எனினும்நெஞ்சே மனமே கவலைபடேல் கவலை உறாதே மெய் வினை உறுவார்க்கு மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் = (அவர்நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல் விதி இல்லை ஊழ் இல்லையாம் !

-------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

---------------------------------------------------------------------------------------

செய்த தீவினைகளின் பயனைத் துய்த்திடாமல் (அனுபவிக்காமல்) இருப்பதற்கு ஏதேனும்  வழிகள்  உண்டா என்று கேட்டால், இல்லை என்பதே விடை !

வேதம் முதலான அனைத்து நூல்களிலும் இந்தக் கேள்விக்கு விடை இல்லை என்பது அறுதியிட்ட உண்மை !

நெஞ்சே! நீ வினை வலிமையை வெல்ல நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவுதான் உன்னால் முடியும் !

நல்லறங்கள் ஆற்றி, நல்வினைகள் புரிவதனால் விண்ணுலகம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நீ புரிந்து கொள் 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------     

நல்வினைகள் ஆற்றி விண்ணுலகம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 20]

{04-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (38) நன்றென்றும் தீதென்றும் நானென்றும் !

அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (38) நன்றென்றும் தீதென்றும் !!

-----------------------------------------------------------------------------------------

நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்

அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே நின்றநிலை

தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்

போனவா தேடும் பொருள் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

நன்று என்றும் தீது என்றும் நான் என்றும் தான் என்றும்

அன்று என்றும் ஆம் என்றும் ஆகாதே நின்ற நிலை

தான் அது ஆம் தத்துவம் ஆம் சம்பு அறுத்தார் யாக்கைக்கு

போனவா தேடும் பொருள் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

-----------------------------------------------------------------------------------------

நன்று என்றும் = (இது) நல்லது என்றும் ; தீது என்றும் = (இது) தீயது என்றும் ; நான் என்றும் = (இது செய்தவன்) நான் என்றும் ; தான் என்றும் = (இது செய்தவன்) அவன் என்றும் ; அன்று என்றும் = (இது) அன்று என்றும் ; ஆம் என்றும் = (இது) ஆகும் என்றும் ; ஆகாதே நின்ற நிலை = பேதம் செய்யாமல் (இரண்டறக் கலந்து) நின்ற நிலையே ; தான் அது ஆம் தத்துவம் ஆம் = ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் ; தேடும் பொருள் = தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது ; சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா = சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுவதற்கு அதுவே அமையும் எனறு அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும் !

-------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இது ”நல்லது  என்றும்,  இது ”கெட்டது  என்றும்,  இதை செய்தவன் நான் என்றும்அன்று அன்று இதைச் செய்தவன் ”அவன் என்றும்இது நடந்தது இன்று என்றும்அன்று அன்று இது நடந்தது  அன்று என்றும், வாழ்க்கையில் நடைபெறும் செயல்களை வேறுபடுத்திப் பிரித்து பார்க்காமல் இருக்கும் பற்று அற்ற நிலையே உண்மை நிலையாகும் !

சம்பங் கோரைப் புல்லை அறுத்து எடுத்த பின் அதை கட்டுவதற்கு அதே சம்பங் கோரைப் புல்லைக் கயிறாகப் பயன் படுத்துவதை விட்டு விட்டுவேறு கயிறு தேடும் மனிதரைப் போல்இறைவன் நம் உள்ளே இருக்கிறான்அவனே அனைத்திற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------       

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ’

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,20]

{04-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (39) முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று !

மெய்ப்பொருளை அடைந்து இன்புற முயல்க !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (39) முப்பதாம் ஆண்டளவில் !!

------------------------------------------------------------------------------------------

முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்

தப்பாமல் தன்னுள் பெறானாயின் செப்புங்

கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்

முலையளவே ஆகுமாம் மூப்பு !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

முப்பது ஆம் ஆண்டு அளவில் மூன்று அற்று ஒரு பொருளைத்

தப்பாமல் தன் உள் பெறான் ஆயின் செப்பும்

கலை அளவே ஆகும் ஆம் காரிகையார் தங்கள்

முலை அளவே ஆகும் ஆம் மூப்பு !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

ஒருவன் எத்துணை ஆழ்ந்து கல்வி கற்றாலும், அவனது முப்பதாம் அகவைக்குள்  ஆணவம், ன்மம், மாயை என்ற மூன்று குற்றங்களையும் கடந்து  இறைவனை உணர வேண்டும்.  இல்லையேல், அவன் கற்ற கல்வி முதிர்ந்த பெண்ணின் மார்பகங்கள் போலப் பயனற்றதாகவே திகழும் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

-----------------------------------------------------------------------------------------

முப்பது ஆம் ஆண்டு அளவில் = முப்பது அகவை அளவினிலேயே ; மூன்று அற்று = முக்குற்றமும் ஒழியப் பெற்று ; ஒரு பொருளை = உறுதிப் பொருளாகிய கடவுளை ; தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் = (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அநுபவ உணர்வால்) அடையான் ஆயின் ; காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் = அழகிய மாதர்கள் முதுமையில் (கணவனுடன் கூடி இன்பம் நுகர்தலன்றி) முலையினை உடையராதல் மாத்திரமே போல ; செப்பும் கலையளவே ஆகுமாம் = (அவள் முதுமையில் கணவனுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------   

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப் பொருளை அடைந்து இன்புற முயல வேண்டும் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,04]

{04-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (40) தேவர் குறளும் திருநான்மறை !

திருக்குறள் முதலியவை பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (40) தேவர் குறளும் திருநான்மறை !

----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும். திரு நான்மறை முடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர் !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

தமிழ் மறை ஆசான் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளும், நான்கு மறை நூல்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமானின் திருக்கோவையார், திருவாசகங்களும், திருமூலரின் திருமந்திரமும் எடுத்துரைக்கும் மெய்ப்பொருள் ஒன்றே ! வெவ்வேறல்ல என்பதை நீ உணர்வாயாக !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

-----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும் = திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும் ; திரு நான்மறை முடிவும் = சிறப்புப் பொருந்திய நால்வேதங்களின் கருத்தும் ; மூவர் தமிழும் = அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருடைய தேவாரமும் ; முனிமொழியும் = வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய  திருக்கோவையார், திருவாசகங்களும் ; திருமூலர் சொல்லும் = திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒருவாசகம் என்று உணர் = ஒரு பொருளையே குறிப்பன என்று உணர்வாயாக !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------    

திருக்குறள் முதலிய  இவையெல்லாம் பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் என்பதாம் !