வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (03) இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு !

மனித உடம்பு துன்பமெனும் பொருளை இட்டு வைக்கும் பையல்லவோ !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல் (03). இடும்பைக்கு இடும்பை !

-----------------------------------------------------------------------------------------

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே.

இடும்பொய்யை மெய்யென் றிராதே இடுங்கடுக

உண்டாயி னுண்டாகு ஊழிற் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

இடும்பைக்கு இடும் பை  இயல் உடம்பு இது அன்றே

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

இயல் உடம்பு இது = பொருந்திய இவ்வுடம்பானது ; இடும்பைக்கு = துன்பமாகிய சரக்குகட்கு ; இடும்பை அன்றே = இட்டு வைக்கும் பை அல்லவா ; இடும் பொய்யை = (உணவினை) இடுகின்ற நிலையில்லாத  இவ்வுடம்பை ; மெய் என்று இராது = நிலையுடையது என்று கருதியிராமல் ; கடுக = விரைவில் ; இடும் = வறியார்க்கு ஈயுங்கள் ; உணடாயின் = (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின் ; பெருவலி நோய் = மிக்க வலிமை உடைய பாசமாகிய பிணியினின்று ; விண்டாரை = நீங்கியவரை ; கொண்டாடும் = விரும்புகின்ற ; வீடு = முத்தியானது ; ஊழின் = முறையாலே ; உண்டாகும் = உங்கட்குக் கிடைக்கும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

மனித உடம்பானது துன்பமெனும் பண்டங்களை இட்டு வைக்கும் பையல்லவா? நிலையில்லாத இவ்வுடம்பை, நிலையுடையதென்று கருதி வாளாவிராமல், ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இயன்றதைச் செய்யுங்கள் . இத்தகைய நல்லறம் உங்களிடத்து உண்டாயின், பந்தபாசம் என்னும் பிணியினின்றும் நீங்கியவரை விரும்புகின்ற வீடு பேறானது உங்கட்குக் கிடைக்கும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடு பேறு உண்டாகும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை, (மார்கழி) 25]

{09-01-2022}

------------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (04) எண்ணி ஒரு கருமம்

காலம் நேரம் கூடிவந்தால் தான் எந்தச் செயலும் நடக்கும் !

----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல் (04). எண்ணி ஒரு கருமம் யார்க்கும் !

-----------------------------------------------------------------------------------------

எண்ணி ஒரு கருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது

புண்ணியம் வந்தெய்து போதல்லாற் கண்ணில்லான்

மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே

ஆங்கால மாகு மவர்க்கு.

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

------------------------------------------------------------------------------------------

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய் ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண்ணில்லான்

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே

ஆம் காலம் ஆகும் அவர்க்கு.

------------------------------------------------------------------------------------------

வடசொல்:

புண்ணியம் = நல்வினை

யார்க்கும் = எத்தன்மையோர்க்கும் ; புண்ணியம் வந்து எய்து போது அல்லால் = (முன் செய்த) நல்வினைகள் வந்து கூடும்போது அல்லாமல் ; ஒரு கருமம் = ஒரு செயலை ; எண்ணி = ஆலோசித்து ; செய்யொண்னாது = செய்து முடிக்க இயலாது ; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் = குருடன் ; மாங்காய் விழ = மாங்காயை விழுவித்தற்கு ; எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் = எறிந்த மாத்திரைக் கோலைப் போலும் ; ஆம் காலம் = நல்வினை வந்து கூடும்போது ; அவர்க்கு ஆகும் = அவர்க்கு அச்செயல் எளிதில் முடியும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

ஒருவன் நல்வினைகள் செய்திருந்தால் ஒரு செயலை நிறைவேற்றுவதற்கான நேரம் கூடிவந்து அவனுக்குக் கைக்கொடுக்கும் ! காலம் கூடிவரவில்லையேல் அச்செயலை அவனால் நிறைவேற்ற முடியாது !

காலம் கைக்கூடாத போது அதை நிறைவேற்ற முயன்றால் கையில் உள்ளதையும் அவன் இழக்க வேண்டி வரும் ! அவன் செயல் கண்ணில்லாத குருடன் மந்திரக் கோலை வீசி  மாங்காயை விழச் செய்ய முயல்வதற்கு ஒப்பாக அமையும் !

வேளை கூடிவரும் வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலைத் தொடங்க வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

நல்வினை செய்யாதவன் செய்யத் தொடங்கிய செயல் முடியப் பெறாத்து மட்டுமல்ல  கைப்பொருளும் இழப்பன்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 25]

{09-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (05) வருந்தி அழைத்தாலும் வாராத வாரா !

விரும்பி அழைப்பதால் இறப்பு வந்துவிடாது !

------------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல்(05) .வருந்தி அழைத்தாலும் வாராத வாரா !

------------------------------------------------------------------------------------------

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமினென்றாற் போகா இருந்தேங்கி

நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா;

பொருந்துவன போமின் என்றால் போகா; - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைந்து

துஞ்சுவதே மாந்தர் தொழில் !

------------------------------------------------------------------------------------------

வடசொல்:

தூரம் = தொலைவு

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

வாராத = (ஊழால்) வரக் கூடாதவைகள் ; வருந்தி அழைத்தாலும் = பரிந்து அழைப்பினும் ; வாரா = வாராவாம் ; பொருந்துவன = (ஊழால்) வரக்கூடியவை ; போமின் என்றால் = போயிடுங்கள் என வெறுப்பினும் ; போகா = போகாவாம் ; இருந்து ஏங்கி = (இவ்வுண்மை அறியாமல்) இருந்து ஏக்கமுற்று ; நெஞ்சம் புண்ணாக = மனம் புண்ணாகும்படி ; நெடுந்தூரம் தாம் நினைந்து = (அவற்றை) தாம் நெடுந்தூரம் சிந்தித்து ; துஞ்சுவதே = மாண்டுபோவதே ; மாந்தர் தொழில் = மனிதர் தொழிலாக உள்ளது.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் ஒருவன் வெறுப்புற்று இறப்பு தன்னைத் தழுவட்டும் என்று வருந்தி வருந்தி  இறப்பைக் கூவி அழைத்தாலும், இறப்புக்கான நேரம் வராத வரை அது  வந்துவிடாது !

இருக்கின்ற செல்வங்கள் போதும், இனிமேல் எனக்குச் செல்வமே வேண்டாம் என்று வெறுப்புற்று விலக்கினாலும் செல்வம் சேரும் காலம் இருக்கும் வரை அது சேர்வதை  விலக்கிடவும் முடியாது !

இந்த உலகியல் உண்மையை உணராமல்  மனம் ஏங்கி ஏங்கிப் புண்ணாகி நெடுந்தொலைவு சிந்தித்து மாண்டு போவதே இந்த வையகத்தில் மனிதர்களின் தொழிலாக உள்ளது !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------

இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் தப்பாமால் வந்து கொண்டிருகும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051,  சிலை (மார்கழி) 25]

{09-01-2022}

-----------------------------------------------------------------------------------------

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (06) உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் !

அளவுக்கு மீறி அவா கொள்ளாதே !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல்(06) . உள்ளது ஒழிய ஒருவர்க்கு !

-----------------------------------------------------------------------------------------

உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்

கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்

கடலோடி மீண்டு கரையேறி னாலென்

உடலோடு வாழும் உயிர்க்கு !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்

கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்

கடல் ஓடி மீண்டு கரை ஏறினால் என்

உடலோடு வாழும் உயிர்க்கு !

-----------------------------------------------------------------------------------------

வடசொல்;

சுகம் = நலம்

-----------------------------------------------------------------------------------------அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

ஒருவர்க்கு = ஒருவருக்கு ; உள்ளது ஒழிய = (ஊழினால்) உள்ள அளவு அல்லாமல் ; ஒருவர் சுகம் = மற்றொருவருடைய சுகங்களை ; கொள்ள = அநுபவிக்க விரும்பினால் ; கிடையா = அவை கூடாவாம் ; (ஆதலால்) குவலயத்தில் = பூமியில் ; உடலோடு வாழும் உயிர்க்கு = மக்களுடம்போடு கூடி வாழும் உயிர்களுக்கு ; வெள்ளக் கடல் ஓடி = வெள்ள நீரையுடைய கடல் கடந்து சென்று (பொருள் தேடி) : மீண்டு கரையேறினால் = திரும்பி வந்து கரையேறினாலும் ; என் = அதனாற் பயன் என்ன ?

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

 ----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை வசதிகளில் க்குரிய பங்கினை அன்றி  பிறருடைய பங்கையும் சேர்த்துக் கூடுதலாக துய்த்திட எந்த மனிதரும் விரும்பலாகாது; விரும்பினால் அவை கிடைக்கவும் கிடைக்காது ! இது தான் உலகியல் அறம் !

அப்படியிருக்கையில், மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்காக கடல் கடந்து செல்வதும் பெரும்பொருள் ஈட்டி வருவதும் எதற்காக ?  அதனால் கிடைக்கப் போகும் ஆதாயம்தான்  ன்ன?

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

கப்பல் ஏறிச் சென்று பெரும் பொருள் ஈட்டினாலும் ஊழின் அளவன்றி அநுபவித்தல் கூடாது .

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) ,25]