வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வினைப்பயனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினைப்பயனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (37) வினைப் பயனை வெல்வதற்கு !

வினைப் பயனை வெல்ல முடியாது !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல் (37) வினைப் பயனை வெல்வதற்கு !

----------------------------------------------------------------------------------------

வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனத்தாய நூலகத்தும் இல்லை நினைப்பதெனக்

கண்ணுறுவ தல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்

விண்ணுறுவார்க் கில்லை விதி !

--------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

வினைப் பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

அனைத்து ஆய நூல் அகத்தும் இல்லை நினைப்பது எனக்

கண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்

விண் உறுவார்க்கு இல்லை விதி !

---------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

----------------------------------------------------------------------------------------

வினைப்பயனை வெல்வதற்கு இரு வினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்) ; வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை ; (எனினும்நெஞ்சே மனமே கவலைபடேல் கவலை உறாதே மெய் வினை உறுவார்க்கு மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் = (அவர்நினைப்பது போலத் தோன்றுவது அல்லாமல் விதி இல்லை ஊழ் இல்லையாம் !

-------------------------------------------------------------------------------------

 பொருளுரை:

---------------------------------------------------------------------------------------

செய்த தீவினைகளின் பயனைத் துய்த்திடாமல் (அனுபவிக்காமல்) இருப்பதற்கு ஏதேனும்  வழிகள்  உண்டா என்று கேட்டால், இல்லை என்பதே விடை !

வேதம் முதலான அனைத்து நூல்களிலும் இந்தக் கேள்விக்கு விடை இல்லை என்பது அறுதியிட்ட உண்மை !

நெஞ்சே! நீ வினை வலிமையை வெல்ல நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வளவுதான் உன்னால் முடியும் !

நல்லறங்கள் ஆற்றி, நல்வினைகள் புரிவதனால் விண்ணுலகம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை நீ புரிந்து கொள் 

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------     

நல்வினைகள் ஆற்றி விண்ணுலகம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 20]

{04-01-2022}

------------------------------------------------------------------------------------------