வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

இடும்பைக்கு இடும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இடும்பைக்கு இடும்பை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (03) இடும்பைக்கு இடும்பை இயல் உடம்பு !

மனித உடம்பு துன்பமெனும் பொருளை இட்டு வைக்கும் பையல்லவோ !

-----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

----------------------------------------------------------------------------------------

பாடல் (03). இடும்பைக்கு இடும்பை !

-----------------------------------------------------------------------------------------

இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே.

இடும்பொய்யை மெய்யென் றிராதே இடுங்கடுக

உண்டாயி னுண்டாகு ஊழிற் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்

-----------------------------------------------------------------------------------------

இடும்பைக்கு இடும் பை  இயல் உடம்பு இது அன்றே

இடும் பொய்யை மெய் என்று இராதே இடும் கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இயல் உடம்பு இது = பொருந்திய இவ்வுடம்பானது ; இடும்பைக்கு = துன்பமாகிய சரக்குகட்கு ; இடும்பை அன்றே = இட்டு வைக்கும் பை அல்லவா ; இடும் பொய்யை = (உணவினை) இடுகின்ற நிலையில்லாத  இவ்வுடம்பை ; மெய் என்று இராது = நிலையுடையது என்று கருதியிராமல் ; கடுக = விரைவில் ; இடும் = வறியார்க்கு ஈயுங்கள் ; உணடாயின் = (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின் ; பெருவலி நோய் = மிக்க வலிமை உடைய பாசமாகிய பிணியினின்று ; விண்டாரை = நீங்கியவரை ; கொண்டாடும் = விரும்புகின்ற ; வீடு = முத்தியானது ; ஊழின் = முறையாலே ; உண்டாகும் = உங்கட்குக் கிடைக்கும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

மனித உடம்பானது துன்பமெனும் பண்டங்களை இட்டு வைக்கும் பையல்லவா? நிலையில்லாத இவ்வுடம்பை, நிலையுடையதென்று கருதி வாளாவிராமல், ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இயன்றதைச் செய்யுங்கள் . இத்தகைய நல்லறம் உங்களிடத்து உண்டாயின், பந்தபாசம் என்னும் பிணியினின்றும் நீங்கியவரை விரும்புகின்ற வீடு பேறானது உங்கட்குக் கிடைக்கும் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடு பேறு உண்டாகும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை, (மார்கழி) 25]

{09-01-2022}

------------------------------------------------------------------------------------------