நெஞ்சில் வஞ்சமிலார்க்கு எல்லாம் கிடைக்கும் !
-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
------------------------------------------------------------------------------------------
பாடல்
(21) நீரு நிழலு நிலம்பொதியும் !!
-----------------------------------------------------------------------------------------
நீரு
நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும்
புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும்
வாழ்நாளும் வஞ்சமிலார்க்கு என்றுந்
தருஞ்சிவந்த
தாமரையாள் தான் !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
நீரும்
நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும்
புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வரும்
திருவும் வாழ்நாளும் வஞ்சம் இலார்க்கு என்றும்
தரும்
சிவந்த தாமரையாள் தான் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
சிவந்த
தாமரையாள் = செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள்
; வஞ்சம் இல்லார்க்கு = வஞ்சனை இல்லாதவருக்கு
; நீரும் = நீர் வளத்தையும் ; நிழலும் = நிழல் வளத்தையும் ; நிலம்
பொதியும் நெற்கட்டும் = நிலத்திலே நிறையும் நெற்போரையும்
; பேரும் = பேரையும் ; புகழும்
= புகழையும் ; பெருவழ்வும் = பெரிய வாழ்வையும் ‘ ஊரும் = சீறூரையும்
; வரும் திருவும் = வளர்கின்ற செல்வத்தையும்
; வாழ்நாளும் = நிறைந்த ஆயுளையும் ; என்றும் தரும் = எந்நாளும் கொடுத்தருளுவள்.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

நெஞ்சில்
வஞ்சனை இல்லாத நேர்மை மனிதர்களுக்கு, தாமரைச் செல்வியாம்
திருமகள் நிறைந்த நீர் வளத்துடன் நில வளமும், நிலத்தில் விளையும்
நெல் வளமும், குடியிருக்க அழகிய உறையுள் வளத்தையும் அருள்வாள்
!
ஊரார்
விதந்து போற்றும் வண்ணம் நற்பெயரையும், நல்லிசைப் பேற்றையும்
வளமான வாழ்வையும், செழுமையான ஊரையும், வளர்கின்ற
செல்வத்தையும் விரும்பி நல்கியருள்வாள் !
இவையன்றி, நோய் நொடி இல்லாத நிறைவான வாழ்நாளையும் நேர்த்தியாய்த் தந்தருள்வாள் நெடியோன் துணைவி, நேரிசைச் செல்வி பொய்கைப் பூவையாள் !
------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------------------------------------------------------------------
வஞ்சனை
இல்லாதவருக்கு இலக்குமியினது அருளால் எல்லா நலமும் உண்டாகும் !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக