பசியால் துடிக்கும்போது மனிதன் விலங்காகிப் போகிறான்!
----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல்:
(26) மானம் குலம் கல்வி !
----------------------------------------------------------------------------------------
மானங்
குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந்
தவமுயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்
திடப்பறந்து போம் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
மானம்
குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசி வந்த
சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப்
பறந்து போம் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
பசி வந்திட = பசி நோய் வந்தால் ; மானம் = மானவுணர்வும்
; குலம் = நற்குடியில் பிறந்தவன் என்னும் நினைவும்
; கல்வியும் = கற்ற கல்வியும் ; வண்மை = பிறருக்குக் கொடுத்துதவும் பண்பும் ;
அறிவுடைமை = அறிவாற்றலும் ; தானம் = கொடைக்குணமும் ; தவம்
= பற்றற்ற தன்மையும் ; உயர்ச்சி = உயர்வான எண்ணமும் ; தாளாண்மை = தொழில் முயற்சியும் ; தேனின் கசிவந்த சொல்லியர் மெல் காமுறுதல்
= இன்மொழி மங்கையர் மேல் காதல் கொள்ளல் ஆகிய ; பத்தும் பறந்து போம் = இப்பத்தும் விட்டோடிப் போம்
!
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
பசி என்னும் கொடிய உணர்வு ஆட்டுவிக்கும் போது, ஒருவன் உணவு தேடுவதிலேயே குறியாக இருப்பான்; தன் மானம் அழிந்து போவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்; தன் குடிப்பிறப்பின் பெருமை சீர்குலைவதைப் பற்றிப் பொருட்படுத்த மாட்டான் !
கல்வி
தனக்குக் கற்றுக்கொடுத்த பண்புகளின் வீட்சி பற்றி சிந்திக்கமாட்டான்;
பிறருக்குக் கொடுத்து உதவும் குணத்தைப் பற்றிய எண்ணம் இராது
; அறிவாற்றல் கெடுவதைப் பற்றிய கவலை இராது !
கொடைக்குணம்
மறைந்து போகும்; பற்றற்ற
தன்மை பறந்து போகும்; உயர்ந்த எண்ணங்கள் உருக்குலைந்து போகும்;
உழைத்து உணவுக்கு வழி தேடும் முயற்சிகளைக் கைவிடுவான் !
இன்மொழி
மங்கையின் மேல் கொண்ட காதல் காற்றில் கரைந்துவிடும்; பசிக்
கொடுமை வந்துவிட்டால்
மனிதன், மனிதப் பண்புகளை எல்லாம் இழந்து, விலங்கினும் கீழாக மாறிப் போகிறான் ! பசி நோயினும் கொடிது
பிறிதில்லை !
------------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
-----------------------------------------------------------------------------------------
மானம்
முதலிய எல்லா நலன்களையும் கெடுத்தலினாலே பசி நோயினும் கொடிது பிறிதில்லை !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022)
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக