வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானமிழந்து போவான் !
-----------------------------------------------------------------------------------------
நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
---------------------------------------------------------------------------------------
பாடல்:
(25) ஆன முதலில் அதிகம் செலவானால் !
---------------------------------------------------------------------------------------
ஆன முதலில்
அதிகஞ் செலவானான்
மானம்
அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும்
கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும்
பொல்லனாம் நாடு !
---------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
---------------------------------------------------------------------------------------
ஆன முதலில்
அதிகம் செலவு ஆனால்
மானம்
அழிந்து மதி கெட்டு – போன திசை
எல்லார்க்கும்
கள்ளன் ஆய் ஏழ் பிறப்பும் தீயன் ஆய்
நல்லார்க்கும்
பொல்லன் ஆம் நாடு !
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
ஆன முதலில்
செலவு அதிகம் ஆனான் = தனக்குக் கிடைத்த முதற் பொருளுக்குச்
செலவு அதிகமானவன் ; மானம் அழிந்து = மானம்
கெட்டு ; மதி கெட்டு = அறிவு இழந்து
; போன திசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் = தான் ஓடிப்போன
திசையினும் எல்லார்க்கும் திருடனாகி ; ஏழ் பிறப்பும் தீயன் ஆய்
; எழுவகைப் பிறப்புக்களிலும் பாவம் உடைவன் ஆகி ; நல்லார்க்கும் பொல்லன் ஆம் = (தன்னிடத்தில் அன்பு வைத்த)
பெண்டிர்களுக்கும் பொல்லாதவன் ஆவான் ; நாடு
= (இதனை) ஆராய்ந்து அறிவாயாக !
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
சொந்தமாகத் தொழில் செய்து பிழைக்க விரும்பும் ஒருவன் தொழிலில் முதலீடு செய்திருக்கும் தொகையைவிட அதிகமாகச் செலவு செய்தால் என்னவாகும் ?
கைப்பணம்
கரைந்து போகும்; கடன் தொகை மிகுதியாகும்! பிறரால் ஏளனப்படுத்தப் படுவான். மானம் போகும்;
அறிவு வேலை செய்யாது; தீய எண்ணம் கொண்டவனாய் பேசப்படுவான்
!
வாங்கிய
கடனைத் திருப்பித் தரமுடியாமல் ஓடிப் போவான்; எந்த ஊருக்குச்
சென்றாலும் திருடனைப் போல் பார்க்கப்படுவான் ! ஆராய்ந்து பார்த்தால்,
மொத்தத்தில் மனித குலத்துக்கே
பொல்லாதவனாகக் காட்சி அளிப்பான்!
----------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து
----------------------------------------------------------------------------------------
வரவுக்கு
மிகுதியாகச் செலவு செய்பவன் பழி பாவங்களை அடைவான்; ஆதலினால்
வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022)
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக