நினைப்பதெல்லாம் நடப்பதில்லை !
-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல்:
(27) ஒன்றை நினைக்கின் அது !
-----------------------------------------------------------------------------------------
ஒன்றை
நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி
யதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும்
ஈசன் செயல் !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
ஒன்றை
நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி
அது வரினும் வந்து எய்தும் – ஒன்றை
நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனை ஆளும்
ஈசன் செயல் !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
ஒன்றை
நினைக்கின் = ஒரு பொருளைப் பெறநினைத்தால் ; அது ஒழிந்திட்டு ஒன்றாகும் = அப்பொருள் கிடையாமல் வெறொரு
பொருள் கிடைத்தாலும் கிடைக்கும் ; அன்றி அது வரினும் வந்தெய்தும்
= அப்படி அல்லாமல் அப்பொருளே வந்து கிடைத்தாலும் கிடைக்கும்
; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் = (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து
நின்றலும் நிற்கும் ; எனை ஆளுமீசன் செயல் = (இவையெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்
!
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
ஒரு பொருளைப்
பெற நினைத்தால், அப்பொருள் கிடைக்காமல் வேறொரு பொருள் வந்து
கிடைத்தாலும் கிடைக்கும் ! அப்படி அல்லாமல், நினைத்த பொருளே வந்து எனக்குக் கிடைத்தாலும் கிடைக்கும் ! இன்னும் ஒரு பொருளை நினையாது இருக்கையில், அது தானே வந்து
என்முன் நின்றாலும் நிற்கும் ! இவை எல்லாமே என்னை ஆண்டருளும்
இறைவனின் திருவிளையாடல்கள் அன்றி வேறொன்றும் இல்லை !
-----------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
-----------------------------------------------------------------------------------------
இருவினைகளுக்கு
ஈடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின் படியே அன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக