வற்றிவிட்டாலும் கூட ஆறு, ஊற்று நீரை உலகுக்கு அளித்து உதவுகிறது !
---------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
--------------------------------------------------------------------------------------
பாடல் (09) ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் !
--------------------------------------------------------------------------------------
ஆற்றுப் பெருக்கற் றடிசுடு மந்நாளு மவ்வாறு
ஊற்றுப் பெருக்கால்
உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்லகுடிப் பிறந்தார்
நல்கூர்ந்த ரானாலும்
இல்லையென மாட்டா
ரிசைந்து.
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
ஆற்றுப் பெருக்கு அற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப்
பெருக்கால் உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல
குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை
என மாட்டார் இசைந்து.
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
பெருக்கு = நீர்ப் பெருக்கு ; அற்று = வறண்டுபோய் ; அடி சுடும் = நடப்போர் பாதங்களை மணல் சுடுகின்ற ; ஊற்று = ஆற்று மணலிடையே தோண்டப் பெறும் கிணறு போன்ற பள்ளம் ; உலகு ஊட்டும் = மக்களின் தாகத்தைத் தணிக்கும் ; ஏற்றவர்க்கு = இரவலர்களுக்கு ; நல்ல குடிப் பிறந்தார் = உயர்ந்த குடியில் பிறந்த மனிதர்கள் ; நல்கூர்ந்தார் = வறியவர்கள்; (நல்குரவு = வறுமை) ; இசைந்து = மனம் ஒப்பி.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
தண்ணீர் வற்றிக் கோடை வெப்பத்தால் கால் சுடும் அளவிற்கு எங்கும் மணல்வெளியாக மாறிப் போனாலும்கூட, அதைத் தோண்டுவோருக்கு, ஊற்று நீரைக் கொடுத்து இந்த உலகதிற்கு உதவுகிறது ஆறு !
அதைப்போல நற்குடியிற் பிறந்தவர்கள், தம் செல்வத்தை
எல்லாம் இழந்து வறுமையுற்ற காலத்திலும் கூட,
இரவலர்களுக்கு (பிச்சை எனக் கேட்போர்) மனமிசைந்து “இல்லை” எனச் சொல்ல மாட்டார்கள். இயன்றதைத் தருவர்!
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
உயர்ந்த
குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 24]
{08-01-2022}
------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக