வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (10) ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் !

அடித்துக்கொண்டு அழுது புரள்வதால் மாண்டார் வரப்போவதில்லை !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (10) ஆண்டாண்டு  தோறும் அழுது !

-----------------------------------------------------------------------------------------

ஆண்டாண்டு  தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநிலத்தீர்வேண்டா

நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்

எமக்கென்னென் றிட்டுண் டிரும்.

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மா நிலத்தீர்வேண்டா

நமக்கும் அது வழியே நம் போம் அளவும்

எமக்கு என் என்று இட்டு உண்டு இரும் !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மா நிலத்தீர் = இந்தப் பூமியில் பிறந்திருக்கும் மனிதர்களே ; ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் = எந்நாளும்  ஆற்றாமையால் அழுது அங்கலாய்த்துக்  கொண்டிருப்பதால் ; மாண்டார் வருவரோ = இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்) ; வேண்டா = (ஆதலினால்) அழவேண்டுவதில்லை ; நமக்கும் அது வழியே = நமக்கும் அவ்விறப்பே வழியாகும் ; நாம் போம் அளவும் = நாம் இறந்து போமளவும் ; எமக்கு என் என்று = எமக்கு யாது தொடர்பு என்று ; இட்டு உண்டு இரும் = இரவலர்க்கு ஐயமிட்டு நீங்களும் உண்டு  கவலையற்று இருங்கள்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இறப்பு என்பது இயல்பானது; இறந்து போனவரைப் பற்றி எண்ணி எண்ணி எத்தனை ஆண்டுகள் அழுதாலும் சரி, மாண்டவர் இவ்வுலகத்திற்கு மீண்டும் வரப் போவதில்லை !

ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பே இறுதி வழி ! எனவே நமக்கு இறப்பு வரும் வரையில் நடந்ததை எண்ணி வருந்திக்கொண்டிராமல், நமக்கு மட்டும் என்று செல்வத்தை சேர்த்து வைக்காமல் இல்லாதவர்களுக்கும் கொடுத்து எளிமையாக வாழுங்கள் !  

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

----------------------------------------------------------------------------------------

இறந்துபோனவரை எண்ணி அழுவதால் பயனில்லை. எனவே அறம் செய்து வாழ்ந்து கவலை நீங்கி வாழ்வீராக !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக