வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

சனி, 8 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (08) ஈட்டும் பொருண் முயற்சி எண்ணிறந்த !

செல்வம் தேடி எத்தனை முயன்றாலும் !

----------------------------------------------------------------------------------------

கி.பி .9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் நல்வழிஎன்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.  இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40  பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு பாடல் உங்களுக்காக !

-----------------------------------------------------------------------------------------

பாடல் (08) ஈட்டும் பொருண் முயற்சி !

-----------------------------------------------------------------------------------------

ஈட்டும் பொருண் முயற்சி எண்ணிறந்தா வாயினுமூழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம் தேட்டம்

மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணுந் தனம் !

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

ஈட்டும் பொருள் முயற்சி எண் இறந்த ஆயினும் ஊழ்

கூட்டும்படி அன்றிக் கூடா ஆம்- ஹேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம் !

-----------------------------------------------------------------------------------------

வடசொற்கள்:

மரியாதை = பண்பு; மதிப்பு

தனம் = செல்வம்

மகிதலம் = பூமி

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

மகிதலத்தீர் = பூமியிலுள்ள மனிதர்களே ; கேண்மின் = கேளுங்கள் ; ஈட்டும் பொருள் = தேடுதற்குரிய பொருள்களானவை ; முயற்சி எண் இறந்த ஆயினும் = முயற்சிகள் அளவில்லாதன வாயினும் ; ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் = ஊழ் கூட்டும் அளவின் அல்லாமல் சேராவாம் ; தனம் தரியாது = ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலை பெறாது ; தேட்டம் மரியாதை = (ஆதலினால் நீங்கள்) தேடத் தகுவது மரியாதையேயாம்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

மாந்தர்களே கேளுங்கள் ! செல்வம் தேடுவதற்கான உங்கள் முயற்சிகள் எண்ணற்றவையாக இருக்கலாம் ! நீங்கள் எத்துணை முயன்றாலும் சரி ! உங்களிடம் எவ்வளவு சேரவேண்டுமோ அவ்வளவு தான் சேரும் !

அதையும் மீறி மிகுதியாகச் சேர்ந்தாலும், உங்களிடம் அது நிலையாகத் தங்கிவிடாது ! ஆகையால் நீங்கள் தேட வேண்டியது செல்வமன்று, பிறர் உங்களை மதிப்புடன் நோக்கத்தக்க உயரிய நிலைப்பாடு தான் !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------

பொருள் ஊழின் அளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலை பெறாமையாலும், நிலைபெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

நல்வழிவலைப்பூ,

[தி.:2051, சிலை (மார்கழி) 24]

{08-01-2022}

 ----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக