வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (11) ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் !

உணவில்லாமல் ஒரு நாள் ஓய்வாக இரு என்றால் வயிறு கேட்பதில்லை !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல் (11) ஒருநாள் உணவை !

---------------------------------------------------------------------------------------

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்த லரிது !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்

இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்ஒரு நாளும்

என் நோ அறியாய் இடும்பை கூர் என் வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது !

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இடும்பைகூர் என் வயிறே = தும்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே ; ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் = (கிடையாத போது) ஒரு நாளுக்கு உணவை விட்டிரு என்றால் விட்டிராய் ; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் = (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக் கொள் என்றால் ஏற்றுக் கொள்ளாய் ; ஒரு நாளும் என் நோ அறியாய் = ஒரு நாளிலாயினும்  என்னுடைய வருத்தத்தை அறியாய் ; உன்னோடு வாழ்தல் அரிது = (ஆதலினல்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது.

----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

என் வயிறே ! உணவு கிடைக்காத ஒரு நாளில், ”இன்று உணவு கிடைக்கவில்லை; தொந்தரவு செய்யாதே, விட்டுவிடு” என்று சொன்னால் கேட்க மறுக்கிறாய்; ”பசிக்கிறது, உடனே உணவு தா” என்று கேட்டு அடம் பிடிக்கிறாய் !

உணவு நிரம்பக்  கிடைக்கும் இன்னொரு நாளில், ”நாளை உணவு கிடைக்கிறதோ இல்லையோ, இன்று நிரம்பக் கிடைக்கிறது, ஆகையால் இரண்டு நாள்களுக்கு வேண்டிய உணவையும் இப்பொழுதே  சேர்த்து எடுத்துக் கொள்என்று சொன்னால் அதையும் ஏற்க மறுக்கிறாய் !

ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை நீ அறிவதில்லை; நான் சொல்வதைக் கேட்காமல், உன் விருப்பத்திற்கு அடம் பிடித்துத் தொல்லை கொடுக்கும் என் வயிறே,  உன்னோடு கூடி வாழ்தல் என்பது எனக்கு இயலாத துன்ப நிகழ்வாக  அல்லவோ ஆகிவிட்டது !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

வயிற்றுக்கு உணவு அளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக