வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

செவ்வாய், 4 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (40) தேவர் குறளும் திருநான்மறை !

திருக்குறள் முதலியவை பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (40) தேவர் குறளும் திருநான்மறை !

----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும். திரு நான்மறை முடிவும்

மூவர் தமிழும், முனிமொழியும் கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர் !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

தமிழ் மறை ஆசான் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளும், நான்கு மறை நூல்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோரின் தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமானின் திருக்கோவையார், திருவாசகங்களும், திருமூலரின் திருமந்திரமும் எடுத்துரைக்கும் மெய்ப்பொருள் ஒன்றே ! வெவ்வேறல்ல என்பதை நீ உணர்வாயாக !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

-----------------------------------------------------------------------------------------

தேவர் குறளும் = திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும் ; திரு நான்மறை முடிவும் = சிறப்புப் பொருந்திய நால்வேதங்களின் கருத்தும் ; மூவர் தமிழும் = அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவருடைய தேவாரமும் ; முனிமொழியும் = வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய  திருக்கோவையார், திருவாசகங்களும் ; திருமூலர் சொல்லும் = திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒருவாசகம் என்று உணர் = ஒரு பொருளையே குறிப்பன என்று உணர்வாயாக !

-----------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

-----------------------------------------------------------------------------------------    

திருக்குறள் முதலிய  இவையெல்லாம் பொருள் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் என்பதாம் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) ,20]

{04-01-2022}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக