செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் குணமுடையது !
---------------------------------------------------------------------------------------
ஔவையார் அருளிச் செய்த பாடல்கள்
எல்லாம் இனிய வாழ்க்கைக்கு புதிய பாதை அமைத்துத் தருவன. செல்வத்தின் நிலையாமை பற்றி நல்வழி என்னும் நூல்
வாயிலாக ஔவையார் அருளிய ஒரு பாடல் இதோ !
--------------------------------------------------------------------------------------
பாடல்.32. ஆறிடு மேடும் மடுவும் !
--------------------------------------------------------------------------------------
ஆறிடு மேடும் மடுவும்போ லாஞ்செல்வம்
மாறிடு மேறிடும் மாநிலத்தீர் -
சோறிடுஞ்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறு முயர்ந்து.
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
ஆறு இடும் மேடும் மடுவும் போல் ஆம்
செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறு
இடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பு ஆக
உள் நீர்மை வீறும் உயர்ந்து.
----------------------------------------------------------------------------------------
வடசொல்:
தருமம் =அறம்
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
---------------------------------------------------------------------------------------
மாநிலத்தீர் = இந்தப் பெரிய பூமியில் வாழும் மாந்தர்களே ! ஆறு இடும் மேடும் மடுவும் போல் = ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடும் பள்ளமும் போல; செல்வம் ஏறிடும் மாறிடும் = செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும் ; (ஆதலினால்) சோறு இடும் = இரந்து வருவோர்க்கு சோறு இடுங்கள் ; தண்ணீரும் வாரும் = (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வார்த்திடுங்கள் (கொடுங்கள்) ; தருமமே சார்பு ஆக = (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக ; உள்நீர்மை உயர்ந்து வீறும் = உள்ளத்திலே தூய தன்மை ஓங்கி விளங்கும். (போல் ஆம் என்பதில் வரும் ஆம் என்பது அசைச் சொல். இதற்குப் பொருள் காண வேண்டியதில்லை)
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
இந்தப் பூவுலகில் வாழும் மாந்தர்களே ! கேளுங்கள் ! ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மணல் மேடுகளும் தாழ்வான பள்ளங்களும் போல உங்களிடம் உள்ள செல்வமும் வளர்வதும் தேய்வதுமான குணங்களை உடையது. ஆகையால், இத்தகைய நிலையற்ற செல்வம் மீது ஆசை வைக்காமல், அறவழியில் உங்கள் சிந்தனையைச் செலுத்துங்கள்; இரவலர்களின் பசித்த வயிற்றுக்குச் சோறு இடுங்கள். அவர்கள் பருகுதற்கு நல்ல தண்ணீரும் கொடுங்கள்; இப்படிச் செய்து வருவீர்களானால், இந்தத் நல்வினையே உங்களுக்கு என்றும் துணை நிற்கும். உள்ளமும் தூய தன்மை உடையதாக ஓங்கி விளங்கும் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
நிலையில்லாதது செல்வம்.
அது உள்ள பொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளியுங்கள். மனம் தூய்மை பெற்று விளங்கும் !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 21]
{05-01-2022}
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக