ஆனைமுகனே ! பாலும் தேனும் உனக்குத் தருகிறேன்; எனக்குத் தமிழில் வல்லமை தா !
------------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! இதோ அந்த இறை வணக்கப்
பாடல் !
------------------------------------------------------------------------------------------
பாடல் (இ.வ). பாலும் தெளி தேனும் பாகும் !
------------------------------------------------------------------------------------------
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரி முகத்துத் தூ மணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா !
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
கோலம் செய் = அழகினைச் செய்கின்ற ; துங்கம் = உயர்வாகிய ; கரிமுகத்து = யானை முகத்தையுடைய ; தூ மணியே = தூய்மையான செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளே ! பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் = ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய ; இவை நாலும் கலந்து = இந்நான்கையும் கலந்து ; நான் உனக்குத் தருவேன் = அடியேன் நினக்கு அளித்துப் பூசை செய்வேன் ; சங்கத் தமிழ் மூன்றும் = சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும் ; நீ எனக்குத் தா – பிள்ளையாரப்பா எனக்குத் தந்தருள்வீராக !
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

அழகிய செம்மணி போன்ற ஆனை முகக் கடவுளே! நினக்கு ஆவின் பாலும் தெளிந்த தேனும், வெல்லப் பாகும், பாசிப் பருப்பும் ஆகிய இந்நான்கையும் கலந்து அளித்துப் பூசை செய்வேன் !
எனக்கு நின் அருள் வேண்டுமப்பா ! முதல் இடை, கடை என்னும் மூன்று சங்கங்கங்களால் வளர்க்கப்பட்ட இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் எனக்குச் சிறந்த புலமையைத் தந்தருள்வாய் ஆனைமுகனே !
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
ஆனைமுகக் கடவுளே ! எனக்கு முத்தமிழிலும் நல்ல புலமையைத் தந்தருள்வாயாக !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) ,26]
{10-01-2022}
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக