அளவுக்கு மீறி அவா கொள்ளாதே !
-----------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு
பாடல் உங்களுக்காக !
----------------------------------------------------------------------------------------
பாடல்(06) . உள்ளது ஒழிய
ஒருவர்க்கு !
-----------------------------------------------------------------------------------------
உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் – வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு !
----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் – வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரை ஏறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்;
சுகம் = நலம்
-----------------------------------------------------------------------------------------அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
ஒருவர்க்கு = ஒருவருக்கு ; உள்ளது ஒழிய = (ஊழினால்) உள்ள
அளவு அல்லாமல் ; ஒருவர் சுகம் = மற்றொருவருடைய
சுகங்களை ; கொள்ள = அநுபவிக்க
விரும்பினால் ; கிடையா = அவை கூடாவாம் ;
(ஆதலால்) குவலயத்தில் = பூமியில்
; உடலோடு வாழும் உயிர்க்கு = மக்களுடம்போடு
கூடி வாழும் உயிர்களுக்கு ; வெள்ளக் கடல் ஓடி = வெள்ள நீரையுடைய கடல் கடந்து சென்று (பொருள் தேடி)
: மீண்டு கரையேறினால் = திரும்பி வந்து
கரையேறினாலும் ; என் = அதனாற் பயன்
என்ன ?
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
வாழ்க்கை வசதிகளில் தமக்குரிய பங்கினை அன்றி பிறருடைய பங்கையும் சேர்த்துக் கூடுதலாக
துய்த்திட எந்த மனிதரும் விரும்பலாகாது; விரும்பினால் அவை கிடைக்கவும் கிடைக்காது ! இது தான் உலகியல் அறம் !
அப்படியிருக்கையில், மேலும் மேலும் பொருள்
சேர்ப்பதற்காக கடல் கடந்து செல்வதும் பெரும்பொருள் ஈட்டி
வருவதும் எதற்காக ? அதனால் கிடைக்கப்
போகும் ஆதாயம்தான் என்ன?
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
கப்பல் ஏறிச் சென்று பெரும் பொருள்
ஈட்டினாலும் ஊழின் அளவன்றி அநுபவித்தல் கூடாது .
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) ,25]
{09-01-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக