வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வியாழன், 6 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (24) நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ் !

நெய்யில்லாத உணவு உடல் நலத்தைக் கெடுக்கும் !

-----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

-----------------------------------------------------------------------------------------

பாடல்: (24) நீறில்லா நெற்றி பாழ்!

-----------------------------------------------------------------------------------------

நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்

ஆறில்லா ஊருக் கழகுபாழ்மாறில்

உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே

மடக்கொடி இல்லா மனை !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

நீறு இல்லா நெற்றி பாழ் நெய் இல்லா உண்டி பாழ்

ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்மாறு இல்

உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் பாழே

மடக்கொடி இல்லா மனை !

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

------------------------------------------------------------------------------------------

நீறு இல்லா நெற்றி பாழ் = (மண்டை நீரேற்றத்தைத் தடுக்கும்என்பதால்) திருநீறு அணியாத நெற்றியினால் நன்மையில்லை ; நெய் இல்லா உண்டி பாழ் = (புளிப்பினால் ஏற்படும் குடல் அரிப்பைத் தடுக்கும் என்பதால், உணவில் நெய் சேர்க்க வேண்டும்) நெய் சேர்க்காத உணவினால் குடலுக்கு நன்மையில்லை ; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் = (ஊருக்கு நீர்வளமும் நிலவளமும்  சேர்ப்பது ஆறு. ஆகையால்) ஆறு இல்லாத ஊருக்கு அதனால் ஏற்படும் பயன்கள் கிடைக்காமற் போகும் ;  மாறு இல் உடன் பிறப்பு இல்லா உடம்பு பாழ் = (பற்றுக்கொண்ட உடன்பிறப்பு என்றும் பலம் தரும்) துணை வலி சேர்க்கும் அண்ணன், தம்பி இல்லாதவன் சண்டை சச்சரவில் ஈடுபட்டால், அவன் உடம்பு புண்ணாகும் ; மனைவி இல்லாத வீடு களை இழந்து உருக்குலைந்து போகும்.

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

நெற்றியில் தரிக்கும் திருநீறு மண்டை நீரேற்றத்தைத் தடுக்கிறது. எனவே, திருநீறு அணியத் தவறுவதால் நமது  நெற்றியின் பயனே வீணாகிப் போகும் (பாழாகும்) !  

புளிப்பு (அமிலம்)  சேர்ந்த உணவு குடலை அரித்துப் புண்ணாக்கும். நெய் சேர்ந்த  உணவு குடல் அரிப்பைக் தடுக்கிறது. ஆகையால் நெய் இல்லாத நிலையில் உண்ணும் உணவின் பயனே  வீணாகிப் போகும்  (பாழாகும்)  !

நீர்வளமும் நிலவளமும் பெருக்குவது ஆறு. ஆறு இல்லாத ஊரில் நெல்வளமும்  குறைவு., எனவே, ஆறில்லாவிடில்  ஊரின் அழகே  வீணாகிப் போகும் (பாழாகும்)  !

பற்றுக் கொண்ட உடன்பிறப்பு, துணை வலியைப் பெருக்கும். துணைவலி இன்மை நிலை உடம்புக்கு ஊறு தரும் . எனவே உடன்பிறப்பு இல்லையேல் நம் உடல் நலமே வீணாகிப்  போகும் (பாழாகும்)  !

இல்லத்துக்கு அழகு இன்சொல் மனைவி. மனையாள் இல்லாத வீடு அதன் இயல்பான பொலிவை இழந்து போகும். எனவே மனைவி இல்லையேல் இல்லத்தின் எழிலே வீணாகிப் போகும் (பாழாகும்) !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

------------------------------------------------------------------------------------------

திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், ஆற்றினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]

{06-01-2022}

-----------------------------------------------------------------------------------------