-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ்
மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று !
ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள்
இருந்துள்ளனர். நல்வழியை அருளிய ஔவையார் கி.பி. 9- ஆம்
நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது அறிஞர்களின் கருத்து !
------------------------------------------------------------------------------------------
பாடல் (02) சாதி இரண்டொழிய வேறில்லை !
------------------------------------------------------------------------------------------
சாதி
இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி
வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார்
பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர்
பட்டாங்கில்
உள்ள படி
------------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
சாதி
இரண்டு ஒழிய வேறு இல்லை சாற்றும்கால்
நீதி
வழுவா நெறிமுறையில் – மேதினியில்
இட்டார்
பெரியோர் இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கில்
உள்ளபடி.
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
சாற்றுங்கால்
= சொல்லப் போனால் ; மேதினியில் = பூமியில் ; சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை = இரண்டு சாதியின்றி வேறு இல்லை (அவ்விரண்டு சாதியாரும்
யாவர் எனில்) ; நீதி வழுவா நெறி = நீதி
தவறாத நல்வழியில் நின்று ; முறையின் = முறையோடு ; இட்டார் = (வறியர் முதலானவர்களுக்கு) ஈந்தவரே ; பெரியோர் = உயர்வாகிய
சாதியார் ; இடாதார் = ஈயாதவரே ;
இழிகுலத்தார் = இழிவாகிய சாதியார் ; பட்டாங்கில் உள்ளபடி = உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்
!
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

இந்தப் பூவுலகில் சாதிகள் இரண்டே இரண்டுதான். இவ்விரண்டைத் தவிர வேறு சாதிகள் இல்லை. இந்த இரண்டு சாதிகளும் எவை தெரியுமா ?
நீதி தவறாது நல்வழியில் நின்று, முறையோடு, வறியவர்க்கும் இயலாதோர்க்கும், முதியோர்க்கும் ஈகை மனம் கொண்டு உதவி செய்வோர் உயர் சாதியினர் !
பசிக்கிறது என்று வந்தவர்களுக்கு, வயிற்றுக்கு
உணவு கூடத் தராத, உதவி செய்கின்ற மனம் கருங்கிப் போன
கருமிகள் இழிந்த சாதியினர். பட்டாங்கு எனப்படும் நீதி நூல்கள் குறிப்பிடும் இரண்டு
சாதிகள் இவ்விரண்டே !
------------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
கொடுப்பவர்
உயர்குலத்தினர் ; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி உலகில் வேறு சாதியில்லை !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedaa70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 26]
{10-01-2022}