நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும் !
-----------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு
பாடல் உங்களுக்காக !
-----------------------------------------------------------------------------------------
பாடல்(01).
புண்ணியம் ஆம்
பாவம் போம் !
------------------------------------------------------------------------------------------
புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் – எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்
தீதொழிய நன்மை செயல்.
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் – எண்ணுங்கால்
ஈது ஒழிய வேறு இல்லை எச் சமயத்தோர் சொல்லும்
தீது ஒழிய நன்மை செயல்.
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
புண்ணியம் ஆம் = அறமானது வளர்ச்சியைக்
கொடுக்கும் ; பாவம் போம் = பாவமானது
அழிவினைச் செய்யும் ; போன நாள் செய்த அவை = முற்பிறப்பில் செய்த அப் புண்ணிய பாவங்களே ; மண்ணில்
பிறந்தார்க்கு = பூமியிலே பிறந்த மனிதர்களுக்கு ; வைத்த பொருள் = (இப்பிறப்பிலே இன்ப துன்பங்களைத்
துய்க்கும்படி) வைத்த பொருளாகும் ; எண்ணுங்கால்
= ஆராய்ந்து பார்க்கின் ; எச்சமயத்தோர்
சொல்லு = எந்த மத்த்தினர் சொல்லுவதும் ; ஈது ஒழிய வேறு இல்லை = இதுவன்றி வேறில்லை ; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் = பாவம் செய்யாது புண்ணியமே செய்க.
------------------------------------------------------------------------------------------
வடசொற்கள்;
புண்ணியம் =
நல்வினை.
பாவம் = தீவினை
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

நல்வினைகளைச் செய்தால் வாழ்வில் வளர்ச்சி எற்படும்; தீவினைகள் செய்தால் தளர்ச்சி ஏற்படும் !
பூமியில் பிறந்திருக்கும்
ஒவ்வொருவரும் இந்நாள் வரைச் செய்துள்ள நல்வினை தீவினைகளே அவர்களது எஞ்சிய வாழ்வை
முடிவு செய்கிறது !
ஆராய்ந்து பார்த்தால், எந்த சமயமாக இருந்தாலும் அது எடுத்துரைக்கும் கருத்து இதுதானே அன்றி வேறில்லை.
ஆகையால் மானிடர்களே, தீவினைகளைத் தவிர்த்து
நல்வினைகளைச் செய்வீர்களாக !
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் உண்டாவதால், தீவினைகள் செய்வதைக்
கைவிட்டு நல்வினைகளைச் செய்வீர்களாக !
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 26]
{10-01-2022}