விரும்பி அழைப்பதால் இறப்பு வந்துவிடாது !
------------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு
பாடல் உங்களுக்காக !
-----------------------------------------------------------------------------------------
பாடல்(05) .வருந்தி அழைத்தாலும் வாராத வாரா !
------------------------------------------------------------------------------------------
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா – இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந்
தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்:
------------------------------------------------------------------------------------------
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா;
பொருந்துவன போமின் என்றால் போகா; - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்
நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில் !
------------------------------------------------------------------------------------------
வடசொல்:
தூரம் = தொலைவு
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
வாராத = (ஊழால்) வரக் கூடாதவைகள்
; வருந்தி அழைத்தாலும் = பரிந்து
அழைப்பினும் ; வாரா = வாராவாம் ;
பொருந்துவன = (ஊழால்) வரக்கூடியவை
; போமின் என்றால் = போயிடுங்கள் என
வெறுப்பினும் ; போகா = போகாவாம் ;
இருந்து ஏங்கி = (இவ்வுண்மை அறியாமல்) இருந்து ஏக்கமுற்று ; நெஞ்சம் புண்ணாக = மனம் புண்ணாகும்படி ; நெடுந்தூரம் தாம் நினைந்து =
(அவற்றை) தாம் நெடுந்தூரம் சிந்தித்து ;
துஞ்சுவதே = மாண்டுபோவதே ; மாந்தர் தொழில் = மனிதர் தொழிலாக உள்ளது.
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

வாழ்க்கையில் ஒருவன் வெறுப்புற்று
இறப்பு தன்னைத் தழுவட்டும் என்று வருந்தி வருந்தி
இறப்பைக் கூவி அழைத்தாலும்,
இறப்புக்கான நேரம் வராத வரை அது
வந்துவிடாது !
இருக்கின்ற செல்வங்கள் போதும், இனிமேல் எனக்குச்
செல்வமே வேண்டாம் என்று வெறுப்புற்று விலக்கினாலும் செல்வம் சேரும் காலம்
இருக்கும் வரை அது சேர்வதை விலக்கிடவும்
முடியாது !
இந்த உலகியல் உண்மையை உணராமல் மனம் ஏங்கி ஏங்கிப் புண்ணாகி நெடுந்தொலைவு சிந்தித்து மாண்டு போவதே இந்த வையகத்தில்
மனிதர்களின் தொழிலாக உள்ளது
!
------------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
------------------------------------------------------------------------------------------
இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள்
தப்பாமால் வந்து கொண்டிருகும்.
ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல்
தக்கதன்று.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 25]
{09-01-2022}