காலம் நேரம் கூடிவந்தால் தான் எந்தச் செயலும் நடக்கும் !
----------------------------------------------------------------------------------------
கி.பி .9-ஆம்
நூற்றாண்டுக்குப் பிந்திய காலத்தில் வாழ்ந்தவர் ”நல்வழி”
என்னும் அரிய நூலைப் படைத்த ஔவையார். இவருக்கு
முற்பட்ட காலத்தில் ஔவையார் என்ற பெயரில் வேறு சில புலவர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இறைவணக்கப் பாடல் நீங்கலாக 40 பாடல்களைக் கொண்ட இந்நூலில் பல
அரிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன ! அதிலிருந்து இதோ ஒரு
பாடல் உங்களுக்காக !
----------------------------------------------------------------------------------------
பாடல் (04). எண்ணி ஒரு கருமம் யார்க்கும் !
-----------------------------------------------------------------------------------------
எண்ணி ஒரு கருமம் யார்க்குஞ்செய்
யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து போதல்லாற் – கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ
லொக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
------------------------------------------------------------------------------------------
சந்தி பிரித்து எழுதிய பாடல்
------------------------------------------------------------------------------------------
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்
ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் – கண்ணில்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல்
ஒக்குமே
ஆம் காலம் ஆகும் அவர்க்கு.
------------------------------------------------------------------------------------------
வடசொல்:
புண்ணியம் = நல்வினை
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
யார்க்கும் = எத்தன்மையோர்க்கும் ;
புண்ணியம் வந்து எய்து போது அல்லால் = (முன்
செய்த) நல்வினைகள் வந்து கூடும்போது அல்லாமல் ; ஒரு கருமம் = ஒரு செயலை ; எண்ணி
= ஆலோசித்து ; செய்யொண்னாது = செய்து முடிக்க இயலாது ; (அப்படிச் செய்யின் அது)
கண் இல்லான் = குருடன் ; மாங்காய் விழ = மாங்காயை விழுவித்தற்கு ; எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் = எறிந்த மாத்திரைக்
கோலைப் போலும் ; ஆம் காலம் = நல்வினை
வந்து கூடும்போது ; அவர்க்கு ஆகும் = அவர்க்கு
அச்செயல் எளிதில் முடியும்.
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
ஒருவன் நல்வினைகள் செய்திருந்தால் ஒரு
செயலை நிறைவேற்றுவதற்கான நேரம் கூடிவந்து அவனுக்குக் கைக்கொடுக்கும் ! காலம்
கூடிவரவில்லையேல் அச்செயலை அவனால் நிறைவேற்ற முடியாது !
காலம் கைக்கூடாத போது அதை நிறைவேற்ற
முயன்றால் கையில் உள்ளதையும் அவன் இழக்க வேண்டி வரும் ! அவன் செயல் கண்ணில்லாத
குருடன் மந்திரக் கோலை வீசி மாங்காயை
விழச் செய்ய முயல்வதற்கு ஒப்பாக அமையும் !
வேளை கூடிவரும் வரும் வரை நாம் செய்யும் எந்த
முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலைத் தொடங்க வேண்டும் !
-----------------------------------------------------------------------------------------
கருத்துச் சுருக்கம்:
-----------------------------------------------------------------------------------------
நல்வினை செய்யாதவன் செய்யத் தொடங்கிய
செயல் முடியப் பெறாத்து மட்டுமல்ல
கைப்பொருளும் இழப்பன்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ:2051, சிலை (மார்கழி) 25]
{09-01-2022}