வாழ்வதற்கு உரியாரை அழிக்க வல்லார் யார் ?
-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9- ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
-----------------------------------------------------------------------------------------
பாடல்
(13) ஆவாரை யாரே அழிப்பர் !
-----------------------------------------------------------------------------------------
ஆவாரை
யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை
யாரே தவிர்ப்பவர் – ஓவாமல்
ஐயம்
புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம்
புவியதன் மேல் !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
ஆவாரை
யாரே அழிப்பர் அது அன்றிச்
சாவாரை
யாரே தவிர்ப்பவர் – ஓவாமல்
ஐயம்
புகுவாரை யாரே விலக்குவர்
மெய்
அம் புவி அதன் மேல் !
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
அம் புவி
அதன் மேல் = அழகிய பூமியின் மேலே ; மெய் = உண்மையாக ; ஆவாரை அழிப்பார்
யார் = வாழ்வதற்கு உரியாரை அழிக்க வல்லார் யாவர் ; அது அன்றி = அதுவல்லாமல் ; சாவாரைத்
தவிர்ப்பவர் யார் = இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார்
யாவர் ; ஓவாமல் = ஒழியாமல் ; ஐயம் புகுவாரை = பிச்சைக்குச் செல்வோரை ; விலக்குவார் யார் = தடுக்க வல்லவர் யாவர் ?
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
இந்தப்
பூமியில் வாழ்வதற்கு உடலியல் தகுதி உள்ளவர்களை வாழக் கூடாது என்று தடுத்து, அழித்துவிடும் வல்லமை உள்ளவர்கள்
இவ்வுலகில் யாரும் இல்லை !
மூப்பினாலும்
பிணியினாலும் நலிவடைந்து இறப்பை எதிர்கொண்டு இருப்பவர்களை, இறக்கக் கூடாது என்று தடுத்து நிறுத்தும் வல்லமை உள்ளவர்களும் யாரும் இல்லை!
பிச்சை
எடுத்து உண்பதை ஒழிவின்றிச் செய்து வரும் இரவலர்களை, அவ்வாறு
செய்ய வேண்டாம் என்று தடுத்து நிறுத்தக் கூடியவர்களும் யாரும் இல்லை !
உண்மையாகச்
சொல்லப்போனால், விலக்க இயலாத உலகியல் நிகழ்வுகளை விலக்கக் கூடிய
வல்லமை உள்ளவர்கள் இவ்வுலகில் ஒருவருமே இல்லை !
------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------------------------------------------------------------------
ஊழினால்
அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் மில்லை.
------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]
{07-01-2022}