பிறரிடம் பல்லைக் காட்டிக் கேட்டு வாங்குதல் இழிவு !
---------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல்
(14) பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை !
----------------------------------------------------------------------------------------
பிச்சைக்கு
மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல
சொல்லி இடித்துண்கை - சிச்சீ
வயிறு
வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை
சால வுறும் !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
பிச்சைக்கு
மூத்த குடி வாழ்க்கை பேசுங்கால்
இச்சை
பல சொல்லி இடித்து உண்கை – சிச்சீ
வயிறு
வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்
விடுகை சால உறும் !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்:
இச்சை = நைச்சியம் ; விருப்பம்
------------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
பேசுங்கால் = சொல்லுமிடத்து ; பிச்சைக்கு மூத்த குடிவழ்க்கை
= பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்)
பெரிய குடிவாழ்க்கையாவது ; பல இச்சை சொல்லி இடித்து
உண்கை = பலவாகிய இச்சைகளைப் பேசி (ஒருவரை)
நெருங்கி வாங்கி உண்ணுதலாம் ; சிச்சீ –
சீச்சீ (இது என்ன செய்கை) ; வயிறு வளர்க்கைக்கு = இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும்
; மானம் அழியாது = மானங் கெடாமல் ; உயிர் விடுகை = உயிரை விடுதல் ; சால உறும் = மிகவும் பொருந்தும்.
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
பிச்சை
எடுத்து உண்டலினும் பெரிய இழிவுடைய குடிவாழ்க்கை என்பது பல்லைக் காட்டி நைச்சியமாக
பேசி ஒருவரை நெருங்கி, கேட்டு வாங்கி உண்ணுதலாகும் !
சீச்சீ ! இது என்ன இழிவான வாழ்க்கை ! இப்படி நெளிந்து குழைந்து
பேசி வயிறு வளர்ப்பதைக் காட்டிலும் மானம் கெடாமல் உயிரை விடுதல் மிகவும் பொருத்தமாக
இருக்கும் !
-----------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------------------------------------------------------------------
பிறரிடத்திலே
இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரைவிட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23
{07-01-2022}