பரிவுக் குணம் மனிதனுக்கு மாண்பைச் சேர்க்கிறது !
------------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
-----------------------------------------------------------------------------------------
பாடல்
(16) தண்ணீர் நில நலத்தால் !
------------------------------------------------------------------------------------------
தண்ணீர்
நில நலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண்ணீர்மை
மாறாக் கருணையால் – பெண்ணீர்மை
கற்பழியா
ஆற்றால் கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்
என்றே அறி !
-----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
தண்ணீர்
நில நலத்தால்; தக்கோர் குணம் கொடையால்;
கண் நீர்மை
மாறாக் கருணையால்; - பெண் நீர்மை
கற்பு
அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம்
என்றே அறி !
-----------------------------------------------------------------------------------------
வடசொல்:
கருணை = அருள்
அற்புதம் = வியப்பு, மேன்மை
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------------------------------------------------------------
தண்னீர்
நில நலத்தால் = தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும்
; தக்கோர் குணம் கொடையால் = நல்லோருடைய குணமானது
ஈகையினாலும் ; கண்ணீர்மை மாறாக் கருணையால் = கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும் ; பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால்
= பெண்களுடைய குணமானது கற்பு நிலை கெடாத வழியினாலும் ; கடல் சூழ்ந்த வையகத்துள் = கடல் சூழ்ந்த பூமியினிடத்து
; அற்புதம் ஆம் = வியக்கத் தக்க மேன்மை உடையன ஆகும்
; என்று அறி – என்று நீ அறிவாயாக !
------------------------------------------------------------------------------------------
பொருளுரை:

நிலத்தின்
தன்மைக்கு ஏற்ப நீரின் இயல்பும் சுவையும் அமைகிறது என்பதால், நிலத்தினால் நீருக்குப் பெருமை உண்டாகிறது !
ஈகைத்
தன்மையே மனிதனை முழு மனிதனாக்குகிறது என்பதால், ஈகைக் குணத்தால்
மனிதனுக்குப் பெருமை உண்டாகிறது !
கண்களில்
ஒளிரும் பரிவு மனப்பான்மையே மனிதப் பிறவிக்கு மாண்பைச் சேர்க்கிறது என்பதால், பரிவுணர்வால் கண்களுக்குப் பெருமை உண்டாகிறது !
கற்பு
என்னும் மனவுறுதி தான் பெண்ணின் இயல்பினை வரையறை செய்கிறது என்பதால், கற்பு
ஒழுக்கத்தால் பெண்ணிற்குப் பெருமை உண்டாகிறது !
கடலால்
சூழப்பெற்ற இவ்வுலகில் வியக்கத்தக்க மேன்மையுடையவை இவைதான் என்பதை ஏ ! மனிதா ! நீ அறிவாயாக !
------------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
------------------------------------------------------------------------------------------
நில நன்மையினாலே
தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை
உண்டாகும் !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]
{07-01-2022}