வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (17) செய் தீவினையிருக்கத் தெய்வத்தை !

வெறும் பானை பொங்காது !

---------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல் (17) செய்தீ வினையிருக்க !

---------------------------------------------------------------------------------------

செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம்வையத்து

அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று

வெறும்பானை பொங்குமோ மேல் !

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------------

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக் கால்

எய்த வருமோ இரு நிதியம்வையத்து

அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று

வெறும் பானை பொங்குமோ  மேல் !

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

பாவம் = தீவினை

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து = பூமியிலே (அறம் செய்தலினாலே) தீவினைகள் நீங்கும் என்று உணர்ந்து ; அன்று இடார்க்கு = அக்காலத்திலே ஈயாதவர்க்கு ; செய் தீ வினை இருக்க = செய்த அத் தீவினை (வறுமைக்கு வித்தாய்)  இருக்க ; இன்று தெய்வத்தை நொந்தக்கால் = இப்பொழுது கடவுளை வெறுத்தால் ; இரு நிதியம் எய்த வருமோ = பெரிய செல்வங்கள் பொருந்த வருமோ (வராது) ; வெறும் பானை மேல் பொங்குமோ = வெறும் பானை (அடுப்பில் வைத்து எரித்தல்) மேலே பொங்குமோ (பொங்காது).

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

பானையில் பால் இட்டுக் காய்ச்சினால் அல்லவோ அது பொங்கும் ! வெறும் பானையை அடுப்பில் ஏற்றித் தீமூட்டி பொங்கு என்றால் பொங்குமா ?

அறம் செய்வதால்  தீவினைகள் நீங்கும் என்பதை உணர்ந்து, மனிதர்கள் அறச் செயல்களில் ஈடுபட  வேண்டும் !

அவ்வாறு செய்யாமல் ஈகைக் குணம்  இன்றித் தன்னல நோக்குடன் இருந்தவர்கள், தாம்  செய்த  தீவினைகள் காரணமாக  வறுமையில் உழல நேர்கிறது !

வறுமை வந்த பிறகு கடவுளை நொந்துகொள்வதால் ஆகப் போவது ஒன்றுமில்லைநல்வினைகள் ஆற்றாமல் தீவினைகள் செய்தவர்களுக்கு  செல்வம் எப்படி வந்து சேரும் ?

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}

-----------------------------------------------------------------------------------------