உழவுத் தொழிலுக்கு இவ்வுலகில் ஒப்பு ஏதுமில்லை !
----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல்
(12) ஆற்றங்கரையின் மரமும் !
----------------------------------------------------------------------------------------
ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்றே – ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறோர் பணிக்கு !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
-----------------------------------------------------------------------------------------
ஆற்றங்
கரையின் மரமும் அரசு அறிய
வீற்று
இருந்த வாழ்வும் விழும் அன்றே – ஏற்றம்
உழுது
உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது
உண்டு வேறு ஓர் பணிக்கு !
-----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
-----------------------------------------------------------------------------------------
ஆற்றங்
கரையின் மரமும் = ஆற்றின் கரையிலுள்ள மரமும் ; அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் = அரசன் அறியப் பெருமையாக
வாழ்கின்ற வாழ்க்கையும் = விழும் அன்றே = அழிந்துவிடும் அல்லவா ? ; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் = உழுது பயிர் செய்து உண்டு
வாழ்வதே உயர்வாகும் ; அதற்கு ஒப்பு இல்லை = அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை ; வேறு ஓர் பணிக்கு
= வேறு வகையான தொழில் வாழ்க்கை எல்லாம் ; பழுதுண்டு
= தவறு உண்டு.
-----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
------------------------------------------------------------------------------------------
ஆற்றின் கரையோரத்தில் உயர்ந்து வளர்ந்து நிற்கின்ற மரம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வந்தால் வேருடன் பறிந்து வீழ்ந்துபோகும்; அதன் வாழ்வு நிலையில்லாதது !
அதுபோல், அரசன் அறியும் படியாகப் பெருமையாக வாழ்கின்ற எந்தவொரு மனிதனின் வாழ்வும் அரசனின் பொறாமைக்கு இலக்காகி
வீழ்ந்துபோகும்; அவன் வாழ்வும் நிலையில்லாதது !
ஆனால், வீழ்ச்சியில்லாத, நிலையான, உயர்வான வாழ்க்கை, உழுதுண்டு வாழ்கின்ற உழவனின் வாழ்க்கையே ஆகும். அவ்வாழ்க்கைக்கு
இவ்வுலகில் நிகர் வேறேதுமில்லை !
வேறு
வகையான தொழில் செய்வோர் வாழ்க்கை எல்லாம் வீழ்ச்சிக்கு இலக்காவதும் உண்டு; உழவுத்
தொழிலுக்கு ஒப்பாவதும் இல்லை !
-----------------------------------------------------------------------------------------
சுருக்கக் கருத்து:
-----------------------------------------------------------------------------------------
உழுது
பயிர் செய்து வாழும் வாழ்க்கையே குற்றமற்றதும், அழிவில்லாததும்,
தன்னுரிமை சார்ந்ததும் ஆகும்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]
{07-01-2022}
-----------------------------------------------------------------------------------------