வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

வெள்ளி, 7 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (15) சிவாய நமவென்று சிந்தித்து !

சிவனே போற்றி என்று சிந்திப்பவர்க்கு !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

----------------------------------------------------------------------------------------

பாடல் (15) சிவாய நமவென்று !

----------------------------------------------------------------------------------------

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு

அபாயம் ஒருநாளும் இல்லைஉபாயம்

இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்

விதியே மதியாய் விடும் !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு

அபாயம் ஒரு நாளும் இல்லைஉபாயம்

இதுவே மதி ஆகும் அல்லாத எல்லாம்

விதியே மதி ஆய்விடும் !

----------------------------------------------------------------------------------------

வடசொல்:

சிவாயநம = சிவனே போற்றி

அபாயம் = இடர்

உபாயம் = நல்வழி

----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

----------------------------------------------------------------------------------------

சிவாயநம() என்று சிந்தித்து இருப்போர்க்குசிவனே போற்றி என்று சிவன் பெயரை மனத்தில் உருவேற்றிக் கொண்டிருப்போருக்கு ; ஒரு நாளும் அபாயம் இல்லை = ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது ; இதுவே = இஃதொன்றுமே ; உபாயம் = (விதியை வெல்லுதற்கேற்ற நல்வழியும் ; மதி = இதுவல்லாத எல்லா அறிவுகளும் ; விதியே ஆய்விடும் = விதியின்படியே ஆகிவிடும்.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

சிவனே போற்றி என்னும் சிந்தனையை மனத்தில் உருவேற்றிக் கொண்டிருப்போர்க்கு வாழ்க்கையில் இன்னல்கள் எதுவும் பின்தொடர்ந்து வாராது !

இஃதொன்றே விதியென்று உரைக்கப்படும் நெடுங்கோட்டைத் அழிப்பதற்கான நல்வழி ! பிறவாறான சிந்தனைகள் எல்லாம் செயலழிந்து விதி என்னும் நெடுங்கோடு நிலைபெற்றுவிடும் !

----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

சிவனுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போருக்கு, விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 23]

{07-01-2022}