வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (29) மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று !

 பழுத்த மரம் வௌவாலை வாவென்று கூவி அழைப்பதில்லை !

----------------------------------------------------------------------------------------------------

தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிச் செயத பல நூல்களுள் நல்வழியும் ஒன்று. அதிலிருந்து, கொடையாளருக்கு எல்லாரும் உறவினரே என்பதை வலியுறுத்தும்  ஒரு பாடல் !

----------------------------------------------------------------------------------------

பாடல்.(29) மரம் பழுத்தால் ஔவாலை வாவென்று !

-----------------------------------------------------------------------------------------

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரு மங்கில்லை  - சுரந்தமுதம்

கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத் தவர்.

---------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்.

---------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி

இரந்து அழைப்பார் யாவரும் அங்கில்லை சுரந்து அமுதம்

கன்று ஆ தரல்போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத்தவர்.

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

மரம் பழுத்தால் = மரத்தில் காய்கள் முற்றிப் பழுத்திருந்தால் ; வௌவாலை = பழத்தைத் தின்று பசியாறும் வௌவாலை ; வா என்று கூவி =  வா” “வாஎன்று கூவி இரந்து அழைப்பார் = வருந்தி அழைப்பவர்கள் ; யாவரும் அங்கு இல்லை = அம் மரத்தருகில் ஒருவருமில்லை ; கன்று ஆ (கற்றா) = கன்றை உடைய பசு ; அமுதம் சுரந்து தருதல் போல் = பாலைச் சுரந்து கொடுத்தல்போல் ; கரவாது அளிப்பரேல் = ஏழை  எளியவர்க்கு  இல்லைஎன்று சொல்லாமல், (ஒளிக்காமல்,) தம்மிடம் உள்ள மிகுதியான செல்வத்தைக்  கொடுத்து அவர்தம் துன்பத்தைத் தீர்ப்பாராயின் ; உலகத்தவர் உற்றார் = உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே  வந்து ) ஈகையாளருக்கு உறவினர் ஆகிவிடுவார் !

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-------------------------------------------------------------------------------------------------

மரம் பழுத்திருந்தால் வௌவாலை வா”, “வாஎன்று  கூவி அழைப்பவர்கள் ங்கு யாரும்  ல்லை. அந்த மரம்தான் பழத்தின் நறுமணத்தால் வௌவாலை ஈர்த்துப் பழத்தை உண்ண அளிக்கிறது !

கன்றை உடைய பசு,  தான் ஈன்ற  கன்றுக்கும், தனக்கு உணவளித்து வளர்க்கும் மனிதருக்கும் தன்னிடம் உள்ள பாலை ஒளித்து வைத்துக்கொள்ளாமல் தானாகவே  சுரந்து அளிக்கிறது !

அதுபோல், மிகுதியாக உள்ள செல்வத்தைத் தமக்கென ஒளித்து வைத்துக் கொள்ளாமல்  ஏழை எளியவர்க்குத் தந்து துன்பம் தீர்ப்பாராயின்வௌவாலைப்போல் தாமே வந்து உலகத்தார் அனைவரும்  அவருக்கு உறவினர் ஆகிடுவர் !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

கொடையாளர்க்கு அனைவருமே உறவினர்கள் தான் !

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

 ----------------------------------------------------------------------------------------