பொய்சாட்சி சொல்பவர் குடும்பம் துன்பப்பட நேரும் !
---------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
--------------------------------------------------------------------------------------
பாடல்:
(23) வேதாளஞ் சேருமே !
---------------------------------------------------------------------------------------
வேதாளஞ்
சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள
மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து
வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ்
சொன்னார் மனை !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
வேதாளம்
சேரும்;
வெள்ளெருக்குப் பூக்கும்;
பாதள
மூலி படரும்; - மூதேவி
சென்று
இருந்து வாழ்வள்; சேடன் குடி புகும்;
மன்று
ஓரம் சொன்னார் மனை !
----------------------------------------------------------------------------------------
வடசொல்:
சேடன் = சேஷன் என்பதன் மரூஉ. சேஷன்
என்பதற்கு வேறு பல
பொருள்களுடன் பாம்பு என்னும்
பொருளும் உள்ளது.
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
மன்று
ஓரம் சொன்னார் மனை = வழக்காடு (நீதி) மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவருடைய வீட்டில் ; வேதாளம்
சேரும் = பேய்கள் (வந்து) சேரும் ; வெள்ளெருக்குப் பூக்கும் = வெள்ளெருக்கு முளைத்துக் காடாகிப் பூக்கும் ; பாதாள மூலி
படரும் = சப்பாத்திக் கள்ளிச் செடி படர்ந்து வளரும் ;
மூதேவி சென்று வாழ்வள் = மூதேவியானவள் போய் நிலைபெற்று
வாழ்வாள் ; சேடன் குடிபுகும் = பாம்புகள்
குடியிருக்கும்.
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-----------------------------------------------------------------------------------------
வழக்காடு
(நீதி) மன்றத்தில் எந்தவொரு மனிதருக்கும் எதிராகப் பொய் சாட்சி சொல்லக்
கூடாது. மனசாட்சியை மதிக்காமல் பொய் சாட்சி சொன்னால் அவர் குடும்பமே
அழிந்து போகும்; அஃதன்றி அவர் குடியிருக்கும் வீடும் பாழாகிப்
போகும் ! எப்படி ?
அவர்
குடியிருக்கும் வீட்டில் பேய்கள் வந்து சேரும்; தீமையின் அடையாளமான வெள்ளெருக்கஞ் செடி வளர்ந்து பூ பூக்கும்; பாதாள மூலி
எனப்படும் சப்பாத்திக் கள்ளி படர்ந்து வளரும்; வறுமைக்குக் காரணமாகச்
சொல்லப்படும் மூதேவி போய் வாழ்வாள்; பாம்புகள் குடியிருக்கும் புதர்கள்
மண்டிப்போகும் !
[இவையெல்லாம், குடியும், குடியிருக்கும்
இல்லமும் பாழாகும் என்பதை விளக்கும் குறியீடுகள் ! ஔவையார் மொழியில்
சொன்னால்தானே மக்கள் சற்றுக் காதுக் கொடுத்தாவது கேட்கிறார்கள்]
-----------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
------------------------------------------------------------------------------------------
நீதி
மன்றத்தில் பொய் சாட்சி சொல்பவர் குடும்பத்தோடு அழிவது மட்டுமன்றி அவர் குடியிருந்த
வீடும் பாழாம்.
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 22]
{06-01-2022}
-----------------------------------------------------------------------------------------