வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (34) கல்லானே யானாலும் கைப்பொருள் !

செல்வந்தனை உலகம் போற்றும் !

------------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

------------------------------------------------------------------------------------------

பாடல் (34) கல்லானே யானாலும் !

------------------------------------------------------------------------------------------

கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் இல்லானை

இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லாது அவன்வாயிற் சொல் !

-----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------------

கல்லானே ஆயினும் கைப் பொருள் ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர்; - இல்லானை

இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்று எடுத்த தாய் வேண்டாள்;

செல்லாது அவன் வாயில் சொல் !

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------------------------------------------------------------------------

கல்வியறிவு இல்லாத மனிதனாக இருந்தாலும் அவனிடம் பொருட் செல்வம் இருக்குமேல் எல்லா மக்களும் சென்று அவனைப் பார்த்துப் போற்றிப் புகழ்வர் !

பொருள் இல்லாத மனிதனாக இருந்தால், அவனுக்கு மாலையிட்டு மணந்த மனைவியும் கூட விரும்பாள்; அவனை ஈன்றெடுத்த தாயும் விரும்பாள் !

பொருள் இல்லாத வறிய மனிதனின் சொல்லை இந்த உலகம் துளிக்கூட மதிக்காது; பிற மனிதர்கள் அவனை ஏளனமாகவே  பார்ப்பார்கள் ! 

------------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்;

------------------------------------------------------------------------------------------

கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் = (ஒருவன்) படியாதவனே ஆயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால் ; எல்லாரும் சென்று எதிர்கொள்வர் = (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர் ; இல்லானை இல்லாளும் வேண்டாள் = (படித்தவனே ஆயினும் பொருள்) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள் ; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் = (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள் ;அவன் வாயில் சொல் செல்லாது = அவன் வாயிற் பிறக்கும் சொல்லானது பயன்படாது !

------------------------------------------------------------------------------------------

கருத்துச் சுருக்கம்:

------------------------------------------------------------------------------------------கல்லாதவனேயாயினும் பொருள் உடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனே ஆயினும் பொருள் இல்லாதவனை ஒருவரும் மதியார் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

--------------------------------------------------------------------------------------------------------