அவரவரும் செய்த வினைகளை அவரவரும் துய்த்தலே நியதி!
-----------------------------------------------------------------------------------------
நல்வழி
என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று.
இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்
தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !
----------------------------------------------------------------------------------------
பாடல்:
(30) தாந்தாமுன் செய்த வினை !
----------------------------------------------------------------------------------------
தாந்தாமுன்
செய்தவினை தாமே யநுபவிப்பார்
பூந்தா
மரையோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை
யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும்
போமோ விதி !
----------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்:
----------------------------------------------------------------------------------------
தாம்
தாம் முன் செய்த வினை தாமே அநுபவிப்பார்
பூந்
தாமரையோன் பொறி வழியே – வேந்தே
ஒறுத்தாரை
என் செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும்
போமோ விதி !
----------------------------------------------------------------------------------------
வடசொல்:
அநுபவிப்பார் = துய்ப்பார்
----------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
----------------------------------------------------------------------------------------
வேந்தே = அரசனே ; தாம் தாம் முன்செய்த வினை = தாம் தாம் முன்பு செய்த நல்வினை தீவினைகளை ; பூந்தாமரையோன்
பொறி வழியே = தாமரை மலரில் இருக்கின்ற படைப்புக் கடவுள் விதித்தபடியே
; தாமே அநுபவிப்பார் = தாமே அநுபவிப்பார்கள்
; ஒருத்தாரை என் செயலாம் = (தீவினையாலே தூண்டப்பட்டு)
தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம் ; ஊர் எல்லாம்
ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ = ஊரிலுள்ள எல்லாரும் திரண்டு வெறுத்தாலும்
விதி போகுமா (போகாது).
----------------------------------------------------------------------------------------
பொருளுரை:
----------------------------------------------------------------------------------------
வேந்தே ! ஒவ்வொரு மனிதனும் தான் முன்பு செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப விளையும் பயன்களை
எதிர்கொண்டு துய்த்தே (அநுபவித்து) ஆகவேண்டும் ! இதிலிருந்து
யாரும் தப்பிக்க முடியாது !
ஒரு மனிதனை இன்னொரு மனிதன் ஒறுத்தால் (தண்டித்தால்) அதற்காக அவனை என்ன செய்வது ? முதல் மனிதன் செய்த தீவினையின் பயன் இரண்டாமவன் வழியாக ஒறுப்பாகி இருக்கிறது !
இதுபோல் நேரக்கூடாது என்று ஊரெல்லாம்
கூடி எதிர்த்தாலும் அல்லது வெறுத்தாலும்,
நேரவேண்டியது நேராமல் போய்விடுமா என்ன ?
நேர்ந்தே தீரும் ! அதுதானே இயல்பு !
---------------------------------------------------------------------------------------
சுருக்கக்
கருத்து:
---------------------------------------------------------------------------------------
தமக்கு
ஒருவன் துன்பம் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கு
ஈடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்தது என்று அமைவதே அறிவு !
---------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”நல்வழி” வலைப்பூ,
[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]
{05-01-2022}