வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

புதன், 5 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (31) இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று !

பிழையுடைய பாட்டைவிட உரைநடை மேலானது !

----------------------------------------------------------------------------------------

நல்வழி என்பது ஔவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. இந்நூல் கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியது என்பது அறிஞர்களின் கருத்து !

---------------------------------------------------------------------------------------

பாடல்: (31) இழுக்குடைய பாட்டிற்கு !

----------------------------------------------------------------------------------------

இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்

ஒழுக்கம் உயர்குலத்தின் நன்றுவழுக்குடைய

வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்

தாரத்தின் நன்று தனி !

----------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------------

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று; சாலும்

ஒழுக்கம் உயர் குலத்தின் நன்று; - வழுக்கு உடைய

வீரத்தின் நன்று விடா நோய்; பழிக்கு அஞ்சாத்

தாரத்தின் நன்று தனி !

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

-----------------------------------------------------------------------------------------

இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று = இலக்கண வழுக்களை உடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது ; உயர் குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று = உயர்குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப் பட்ட ஒழுக்கம் நல்லது ; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று = தவறுதலை உடைய வீரத்தினும் தீராப் பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று = பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

-----------------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------------------------------------------------------------------------

இலக்கணப் பிழைகள் நிறைந்த செய்யுள் எழுதிக் கருத்துச் சொல்வதைவிட, செய்யுள் அல்லாத உரைநடையில் ஒரு கருத்தைச் சொல்வது  மேலானது !

வாழ்க்கையில் நல்லொழுக்கம் உடையவராகத் திகழ்தல் என்பது, உயர் குலத்தில் பிறப்பதைவிடவும் மிகவும் மேலானது !

பகைவரை எதிர்கொண்டு நுண்ணறிவு (விவேகம்) இல்லாது வீரத்தைக் காட்டித் தோற்பதைவிட, நோயாளியாகவே வாழ்தல்  மேலானது !

தவறு செய்தால் பழிநேருமே என்று அஞ்சாமனைவியுடன் காலமெல்லாம் வாழ்வதைக் காட்டிலும் தனியனாக வாழ்தலே மேலானது !

-----------------------------------------------------------------------------------------

சுருக்கக் கருத்து:

-----------------------------------------------------------------------------------------

இலக்கணப் பிழை உடைய பாட்டும், நல்லொழுக்கமில்லாத உயர்குலமும், தவறுதலை உடைய வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும்.

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051, சிலை (மார்கழி) 21]

{05-01-2022}

-----------------------------------------------------------------------------------------