நல்வழி வலைப்பூ !

வழிகாட்டும் திசைகாட்டி !

வழிகாட்டும் திசைகாட்டி !

இந்த வலைப்பதிவில் தேடுக

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நல்வழி (வை.வேதரெத்தினம் உரை) (அ.உ) நல்வழி பற்றிய அறிமுக உரை !

ஔவையார் அருளிய

**** நல்வழி ****

------------------------------------------------------------------------------------------

***** அறிமுக உரை *****

------------------------------------------------------------------------------------------

 

தமிழுக்கு வளம் சேர்த்த பண்டைய புலவர்களுள் ஔவையார் என்னும் நல்லிசைப் புலவரும் அடங்குவர். ஔவையார் என்னும் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது இலக்கியம் அறிந்த சான்றோர்களின் துணிபு !

 

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்றவை, ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் சில. இவற்றுள் நல்வழி என்னும் நூலுக்கு எளிய தெளிவுரை எழுதி தமிழன்பர்கள் சுவைப்பதற்காகப் படைத்திருக்கிறேன் !

 

நல்வழி என்னும் நீதி நூலைப் படைத்த ஔவையார் கி.பி. 9 –ஆம் நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது தமிழறிஞர்கள் ஆய்ந்துணர்ந்த முடிவு !

 

சங்க காலம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம். இதற்குப் பிற்பட்ட 500 ஆண்டுகள் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் வடமொழியும் ஆரியர்களின் கடவுட் கொள்கையும் மெல்ல மெல்லத் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது எனலாம் !

 

கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்களும், ஆரியர்களின் இறைக் கொள்கையும் இடம்பெறத் தொடங்கின. ஔவையார் இயற்றிய நல்வழியிலும் இது எதிரொளிக்கிறது !

 

நீதிக் கருத்துகளைத் தம் பாடல்களில் சொல்லும் ஔவையார் புண்ணியம், பாவம், வினைப்பயன், விதி போன்ற கருத்துகளையும் சில பாடல்களில் புகுத்தியிருக்கிறார். வாழ்வியல்நீதி என்னும்  கருத்து  இலக்கு நோக்கி நடைபயிலத் தொடங்கிய அவர் ”நல்வழி”யிலிருந்து சற்று விலகி ஆரியர்களின் கருத்துகளை நோக்கிய கிளை வழியில் ஏன் உலாச் சென்றார் என்பது ஆய்வுக்குரியது !

 

இஃதன்றி, ”சிவாய நமவென்று சிந்தித்து இருப்போர்க்கு…” (15), “முப்பதாம் ஆண்டளவில்….”(39), தேவர் குறளும், திருநான்மறை முடிவும்….”(40) போன்ற சில பாடல்கள் ஔவையார் இயற்றியவைதானா இவை என்னும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன ! ஓலைசுவடியிலிருந்து எடுத்தெழுதி நூல் வடிவில் பதிப்பித்தவர்களின் சொந்தக் கருத்தும் ஆங்கங்கே புகுத்தப்பட்டிருக்கலாம் என்னும் கூற்றையும் புறந் தள்ளுவதற்கில்லை !

 

”சாதி இரண்டொழிய..’, “ஆற்றுப் பெருக்கற்று…”, ”பாடுபட்டுத் தேடி…”, “மரம் பழுத்தால்…”, “ஆறிடும் மேடும்….” போன்ற நெஞ்சில் நிறைந்த செய்யுள்களை முழுமையாக மீண்டும் படித்து இன்புறும் வாய்ப்பை நல்கியிருக்கிறேன். தமிழ்கூரும் நல்லுலகம் படித்து இன்புறுமாக !


------------------------------------------------------------------------------------------

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

“நல்வழி” வலைப்பூ,

[தி.ஆ: 2051 : சிலை (மார்கழி) 26]

{10-01-2022}

-----------------------------------------------------------------------------------------